மருத்துவப் படிப்பில் நீட்டைத் திணித்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பையே சிதைத்த மத்திய அரசு, 2019 முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் கட்டாயம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று முன்தினம் சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) துணைத் தலைவரான எம்.பி.பூனியா, பொறியியல் படிப்புக்கும் 2019-ம் ஆண்டு முதல் நீட் வருகிறது என்று குறிப்பிட்டார். நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதில் நீதியைப் பெறும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்; முடக்கப்பட்ட நீட்-விலக்கு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



