தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏன் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சொத்து வரி உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புக்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக்கள் மற்றும் குடியிருப்புக்கள் அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி விதிக்கப்பட உள்ளது. ஆனால், சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏன் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊழலில் ஊறி திளைக்கும் அதிமுக அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய 3500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நிதி இன்னமும் கிடைக்க பெறாமல் உள்ளது. மத்திய அரசின் மானிய உதவித் தொகைகளை பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்ப்பு மக்களையும் பாதிக்கும் வண்ணம் அதிமுக அரசு சொத்து வரியை உயர்த்தியிருக்கிறது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



