வாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா?: கருணாநிதி கேள்வி

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாக பேசினால் போதுமா? அதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகளை இழந்துள்ளனர். இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

தமிழகத்தின் தலைநகரமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது முதல்வர் எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்? மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள எத்தனை முகாம்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்? பத்திரிகையாளர்களை எத்தனை முறை சந்தித்து அரசின் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்?

வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் எத்தனை முறை விவாதித்தார்? எதிர்க்கட்சித் தலைவர்களை குறைந்தபட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பேசினாரா? பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து உதவி கோரினாரா? எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எத்தனை முறை பதிலளித்துள்ளார்? இந்த கேள்விகள் அனைத்துக்கும் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.

இந்நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாகப் பேசுகிறார். இதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து தன்னார்வ அமைப்புகளும், இளைஞர்களும் உதவியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மக்கள் பிரச்சினைகளிலும் இளைஞர்கள் தன்னெழுச்சியோடு முன்வந்து தீர்வு காண வேண்டும்.