“இறைவனிடம் கையேந்துங்கள்” புகழ் நாகூர் ஹனீபா காலமானார்

nagore-hanifaசென்னை:’ ‘இறைவனிடம் கையேந்துங்கள்” பாடல் மூலம் புகழ் பெற்ற பாடகர் நாகூர் ஹனீபா, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை கோட்டூர்புரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார் ஹனீபா. அவர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் இசை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில், 1925இல் முகமது இஸ்மாயில் – மரியம் பீவிக்கு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஹனீபா. அவருடைய தந்தைக்கு நாகூர் பூர்வீகம் என்பதால், தன் பெயருடன் நாகூரைச் சேர்த்துக் கொண்டாராம். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாகூர் ஹனீபா, கேள்வி ஞானத்தால் பாடும் திறனை வளர்த்துக் கொண்டவர். 1954ல் பாரதிதாசன் எழுதிய சங்கே முழங்கு பாடல் மூலம் புகழ் அடைந்தவர், ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். அவரது குரல் இந்தப் பாடலின் மூலம் பெரும்பாலான இசை ரசிகர்களைச் சென்றடைந்தது. வானொலியில் இவரது இந்தப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி வானொலி நேயர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தது. பின்னாளில் தி.மு.க.,வினர் நடத்திய கட்சிப் பொதுக் கூட்டங்களில் பாடி வந்தார் ஹனீபா.