‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!’ சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். (ஒரு மறுபதிவு) வயதான தம்பதிகள், மனம் உடைந்து போயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும். பெரியவாள் மௌனம் மேற்கொண்டிருந்த சமயம் காஞ்சீபுரத்திலேயே தங்கி பெரியவாளிடம் பேசி விட்டுத் தான் போவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது. மூன்றாவது நாள்,அவர்கள் கண்களில் கண்ணீரைக் கண்டதும், பெரியவாளின் மனம் உருகிவிட்டது. அவர்கள் இருவரையும் அருகில் அழைத்து உட்காரச் சொன்னார்கள். அவர்களுக்காக மௌனத்தைக் கைவிட்டார்கள். “ஒரே பையன் மூணு வருஷமாக அமெரிக்காவில் இருக்கான். எங்களிடம் கொள்ளை ஆசை…” “அப்புறம் என்ன?” “இப்போ லீவில் வந்திருக்கான். ஒரு வெள்ளைக்காரியோடு கூட…! அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே.” “அந்த வெள்ளக்காரியைக் கல்யாணம் பண்ணிக்க போறானாமா?” “இல்லை என்கிறான். அந்த மார்கரெட் ரொம்ப உயர்ந்த சிந்தனை உடையவள். இந்தியப் பண்பாடு, கலாசாரம்,சமயச் சடங்குகள்,ஆசாரிய புருஷர்கள், புண்ணிய நதிகள், பெரிய கோவில்கள் எல்லாவற்றைப்பற்றியும் நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறாள். நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தால், கொஞ்சம்,கொஞ்சமாகப் பணம் சேர்த்துக் கொண்டு சிக்கனமாக வந்திருக்கிறாள். ஒரு மகானிடம் தத்துவோபதேசம் பெறவேண்டும் என்று ஆசை என்று சொல்கிறான்.” “அப்படியானால் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” முதியவர்களிடம் தயக்கம். “அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை… பெரியவாள் அனுக்கிரகத்திலே….” “சரி,சரி, உன் பையன் ரொம்ப நல்லவன். சொன்னால், கேட்பான். கேரளாவில் ஒரு ஆசிரமம் இருக்கு. அங்கே கிருஷ்ணமேனன் என்று ஒரு சந்யாசி இருக்கிறார்.ரொம்ப இங்கிலீஷ் படிச்சவர். மார்கரெட் மாதிரி இங்கே வருகிற வெளிநாட்டுக்காரர் எல்லாரும் அங்கே போய்த் தங்குவதுதான் வழக்கம். அந்த ஆசிரமத்துக்கு இவளையும் அனுப்பி விடச் சொல்லு. அவள் அங்கே போய், ஒரு மூணு மாசம், இங்கிலீஷ் கீதை, இங்கிலீஷ் பிரும்ம சூத்ரம், இங்கிலீஷ் அத்வைதம் எல்லாம் படிக்கட்டும்…” அவ்வாறு நடந்தது. கேரள ஆசிரமத்துக்குச் சென்றவள், மார்க்கம் கெட்டுப்போகாமல், செம்மையான ஞானம் பெற்று ஊருக்குப் போய்ச் சேர்ந்தாள். இம்மாதிரி வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்
‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari