ரயில் தட்கல் முன்பதிவு கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

புது தில்லி:
ரயில்களின் தத்கல் வகையில் முன் பதிவு செய்வதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.இதை அடுத்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்களில் தட்கல் பயணச் சீட்டுக் கட்டணத்தை ரயில்வே உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.
படுக்கை வசதி கொண்ட பயணச் சீட்டுக்கான தட்கல் கட்டணம் 175 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்சக் கட்டணம் 90 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏசி மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்ச தட்கல் கட்டணம் 250 ரூபாயில் இருந்து 300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 350 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

எனினும், இரண்டாம் வகுப்பு அமரும் வசதிக்கான தட்கல் கட்டணம் குறைந்தபட்சம் 10 ரூபாயாகவும், அதிகபட்சம் 15 ரூபாயாகவும் நீடிக்கும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. குளிர்ச்சாதன முதல்வகுப்புக்கு அதிகபட்ச தட்கல் கட்டணம் 500 ரூபாயாகியுள்ளது. ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க தட்கல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.