தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா ? பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி தனி மாவட்ட இயக்க அமைப்பாளர் இராம. உதயசூரியன்,பொது மக்கள் சார்பில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைத்திட அரசுச் செயலர்,முதல்வர் தனிப்பிரிவு,தலைமைச் செயலர்.உள்துறைச் செயலாளர், அரசுச் செயலர் வருவாய்த்துறை, அரசுச் செயலர், உள்ளாட்சித் துறை மற்றும்  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்
வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், வர்த்தக நகரமுமான தென்காசியானது, பாண்டிய மன்னர்களால், தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்யப் பெற்ற சீரும், சிறப்பும் வாய்ந்தது.  உலகப் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர்  ஆலயம் மற்றும் குற்றால அருவிகளைத் தன்னகத்தே பெற்று, பெயரும் நீங்காப் புகழும் பெற்றது.தென்காசியானது, தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அடங்கிய தாலுகா மற்றும் வருவாய் கோட்டமாக உள்ளது.  இந்நகரமானது மாவட்டத்தின் மற்றும் மாநிலத்தின் தென் மேற்கு எல்லையாக, கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது.  தென்காசி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள் மேற்கு எல்லையில் அமைந்துள்ள படியால், பொது மக்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் செலவு செய்து, மிகுந்த சிரமங்களுக்கிடையே, மாவட்ட தலை நகரை அடைய வேண்டிய நிலை உள்ளது.  வடகிழக்கில் வசிக்கும் மக்கள் 5 மணி நேரத்தை செலவு செய்து தான் மாவட்ட அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா; அலுவலகம், மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை அலுவலகங்களை மிக்க சிரமத்துடன் அணுக வேண்டிய நிலை நீடித்து வருகிறது.மேலும், – இப்பகுதியைச் சார்ந்த நோயாளிகள் பாளைங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருந்துவமனையை அணுகி, சிகிச்சை பெறுவதிலும் மிகுந்த சிரமம் உள்ளது.  பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியால் பலர்  உயிர்  இழக்க நேரிடுகிறது.எல்லாவற்றிற்கும் மேலாக மாவட்டத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.  மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயார் அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.  மாவட்டத்தின் மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் சம்பவங்கள் நிகழும் போதும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போதும், மக்கள் நலன் சார்ந்த வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வது என்றாலும் குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிற அரசு அதிகாரிகள் ஆகியோர்; குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை.  இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதோடு, மாவட்ட நிர்வாகம் செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது.மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக சுமார்; 30 வருடங்களுக்கு முன்னரே தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் உருவாக்கிட வேண்டும் என பொது மக்கள், மற்றும் வணிகர்களால் கோரிக்கை எழுப்பப்பட்டு தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.மேலும், அரசாணை 279 நாள் 09.06.2003-ன் படி (வருவாய் துறையின் படி) உத்தேசிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பரப்பளவு 2500 ச.கி.மீ வரும் பட்சத்தில் அதனை பாpசீலித்து தனி மாவட்டம் உருவாக்கிடலாம் என்ற கருத்துரை உள்ளது.  இங்கு தென்காசி கோட்டத்தின் அளவு மட்டுமே 1903.3805 ச.கி.மீ ஆகும்.  மற்றும் அருகிலுள்ள சேரன்மகாதேவி கோட்டத்தின் சில பகுதிகளை இணைத்தாலே தனி மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ பரப்பளவு கிடைத்துவிடும்.மேலும் தென்காசி என்ற பெயரில் சட்டமன்ற தொகுதி மற்றும் பாராளுமன்றத் தொகுதி உள்ளது.  2004-ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய 1. தென்காசி, 2. கடையநல்லூர் 3. சங்கரன்கோவில், 4. வாசுதேவநல்லூர், 5. ஆலங்குளம், 6. அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைப்பது பொது நலன் கருதி மிக்க அவசியமாக உள்ளது.  இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் இணைத்து தனி மாவட்டம் உருவாக்கினால் அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ள படி 2500 ச.கி.மீ பரப்பளவு 10,00,000 மக்கள் தொகையும், 200 கிராமங்கள் மற்றும் 5 வட்டங்கள் தேவை என்ற நிலை பூர்த்தியாகிவிடும்.  எனவே எல்லா தகுதியும் கொண்ட இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தென்காசியை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் அமைத்திட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய உத்தரவினை பிறத்திட பொது மக்கள் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.