ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றும் மத்திய, மாநில அரசுகள் : ராமதாஸ்

 
ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உண்மையான அக்கறை காட்டாமல், வெற்று நாடகங்களை மட்டும் அரங்கேற்றுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இப்போதைய மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இடைக்காலத் தடை விதித்தது. எனினும் அப்போதைய தமிழக அரசு அளித்த உறுதிமொழி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்- 2009 ஆகியவற்றை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டது.
 
ஆனால், 2011-ஆம் ஆண்டில் விலங்குகள் நல அமைப்புகள் அளித்த அழுத்தங்களுக்கு பணிந்து, வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து அப்போதைய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிக்கை பிறப்பித்தார். அதுதான் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. ஜெய்ராம் ரமேசுக்குப் பிறகு தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பேற்ற போதிலும், அவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்வதில் ஆர்வம் காட்டினார். அதனால் தான் 2014-ஆம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2011 ஆம் ஆண்டு அறிவிக்கையை திரும்பப்பெறுவதாக கடைசி நேரத்தில் மத்திய அரசு கூறினாலும் அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
 
வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து ஐக்கிய முற்போக்கு அறிவிக்கை வெளியிட்டிருக்காவிட்டால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த எந்த தடையும் ஏற்பட்டிருக்காது. ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாக்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியதாக கூறிக்கொள்ளும் தி.மு.க. தலைவர் கருணாநிதி 2011-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவிக்கை பிறப்பிக்காமல் தடுத்திருக்க வேண்டும். மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்த தி.மு.க.வுக்கு அது சாத்தியம் தான். ஆனால், அந்த நேரத்தில் 2ஜி ஊழல் வழக்கில் இருந்து தமது குடும்பத்தினரை காப்பதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட ஜல்லிக்கட்டு போட்டிகளை காப்பாற்றுவதில் காட்ட வில்லை. ஆனால், இப்போது அதையெல்லாம் மறைத்து விட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுவது ஏமாற்று வேலை.
 
ஜல்லிக்கட்டு தொடர்பான சிக்கலில் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்தது மிகப்பெரிய துரோகம் ஆகும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 07.05.2014 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து 19.05.2014 அன்று தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 18 மாதங்கள் ஆன பிறகும் அவ்வழக்கை விசாரணைக்கு கொண்டுவர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்விளைவு தான் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாததுடன் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
 
இன்னொரு புறம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி பெற்றே தீருவோம் என்று கடந்த ஓராண்டாக கூறிவரும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களும் இதுவரை பயனுள்ள வகையில் எதையும் செய்யவில்லை. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய பின்னரும் கூட ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வசதியாக 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் வாக்குறுதி அளித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்து விட்ட நிலையில் சட்டத்திருத்த முன்வரைவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கூட பெறப்படவில்லை. தில்லியில் நடைபெறும் நகர்வுகளை பார்க்கும்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
 
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பொருத்தவரை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தன. இப்போது பாரதிய ஜனதா கட்சியும், அ.தி.மு.க.வும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளைத் தடுக்கும் வகையில் கடந்த காலங்களில் எத்தனையோ அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச்சட்டம் பிறப்பிக்க எந்த தடையும் இல்லை. மத்திய அரசு நினைத்திருந்தால் இதற்கான சட்டத்தை எப்போதோ நிறைவேற்றியிருக்கலாம் இப்போது கூட அவசரச்சட்டம் பிறப்பிக்கலாம். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக அவசர சட்டம் பிறப்பித்து, அதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து தடையை நீக்கினால் போட்டிகளை நடத்த முடியும். உச்சநீதிமன்றம் விடுமுறை முடிந்து ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அதற்குள் அவசர சட்டத்தை தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தின் சார்பில் அசாதாரணமான அழுத்தம் கொடுக்காத பட்சத்தில் இது சாத்தியமில்லை. எனவே, அனைத்துக் கட்சி ஆதரவுடன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசரச் சட்டத்தை பிறப்பிக்கச் செய்ய தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதார் .