குதிரை சவாரி செய்த லாலு மகன் : பா.ஜ.க கடும் கேள்விக்கணை

 
கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன்தினம், தன் பெற்றோர் வீட்டிலிருந்து, அரசு வீட்டிற்கு பீஹார் மாநில சுகாதார துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர்லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், குதிரைச் சவாரி செய்ததை,பாரதீய ஜனதா கட்சி கடுமையான
கேள்விக்கணையை எழுப்பியுள்ளது.
 
பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு உள்ளது.
 
இந்த அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் நேற்று முன்தினம், பாட்னாவில் உள்ள தன் பெற்றோர் வீட்டிலிருந்து, அரை கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள, தன் அரசு வீட்டிற்கு குதிரையில் சென்றார். அப்போது, மற்றொரு குதிரையில், தேஜ் பிரதாப்பிற்கு பயிற்சி அளிக்கும் ஜாக்கி உடன் வந்தார். இவர்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் சென்றனர். குதிரையில் அரசு வீட்டிற்கு சென்றதும், நிருபர்களிடம் பேசிய பிரதாப், ”சில ஆண்டுகளுக்கு முன், குதிரைச் சவாரியை நான் தொடர்ச்சியாக செய்து வந்தேன்; பின் விட்டு விட்டேன். தற்போது மீண்டும் குதிரைச் சவாரி செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்
 
 
பீஹார் தலைநகர் பாட்னாவிலும், மாநிலத்தின் மற்ற சில நகரங்களிலும், காற்று மாசு அதிகரித்துள்ளது. அதை குறைக்க வேண்டும் எனில், இதுபோன்ற குதிரைச் சவாரிகளை மேற்கொள்வது அவசியம் என்றும், அவர் மேலும் கூறினார். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.