தமிழக அரசு  ஊழல்களை ஜனவரி 1ம் தேதி வெளியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

 
 
ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஜனவரி 1ம் தேதி அன்று தமிழகத்தில் அரசுதுறையில் நடைபெறும் ஊழல்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் அநாகரிகமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், விஜயகாந்த் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசுவதாக தெரிவித்தார்.
 
சேலத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வசீகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
 
தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை என்று குற்றம் சாட்டினார்.
 
நிவாரண உதவி வழங்குவது முறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாததால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிவாரண நிதி அரசிடம் தரவில்லை என்றும் மாறாக நேரடியாக மக்களிடையே சென்று நிவாரண நிதி மற்றும் பொருள்களை அளித்து வருகின்றனர் என்றும் வெள்ள நிவாரண விஷயத்தில் தமிழக அரசு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் துறை வாரியாக நடந்த ஊழல் பட்டியலை ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.
 
வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்களோடு கூட்டணி வைக்கப்போவதாக தெரிவித்த வசீகரன், தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்றும் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றும் என்றும் வசீகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.