ஆந்திர படுகொலை: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

திருப்பதி: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஏற்கெனவே பலரும் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்வது போல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர வனப் பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறப்புப் படையினர் மற்றும் வனத்துறையினர் மீது செம்மரக் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாக ஆந்திர போலீஸார் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், அவர்களின் கூற்றுக்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகின. தொழிலாளர்களின் முக்கிய உறுப்புகளில் குண்டுகள் துளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மிக அருகிலிருந்து போலீஸார் சுட்டதே இதற்குக் காரணமாம். மேலும், தொழிலாளி ஒருவரின் மார்பில் 2 குண்டுகளும், முதுகில் 4 குண்டுகளும் துளைத்திருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே தொழிலாளர்களை போலீஸார் கண்மூடித்தனமாக சுட்டதாக புகார் எழுந்துள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஆந்திர மாநில காவல்துறை மறுத்துள்ளது. இதனிடையே பேருந்தில் சென்றவர்களைக் கைது செய்து வனப் பகுதியில் அவர்களை வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.