ஊழல் விசாரணை அறிக்கையில் ஜெட்லி பெயரில்லை?

 
 
 
டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கெஜ்ரிவால் அரசு அமைத்த குழு, தனது விசாரணை அறிக்கையில் ஜெட்லி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகின்றது.
 
ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதில் கூறப்படுவதாவது :-
 
டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக ஜெட்லி 13 வருடம் இருந்த போது, தவறு எதுவும் செய்ததாக எதுவும் குறிப்பிடப் படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஜெட்லி தலைவராக இருந்த போது நிதி முறைகேடு நடந்தது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது.
 
ஆனால் கிரிக்கெட் சங்க ஊழல் சர்ச்சையை கிளப்பிய ஆம் ஆத்மியினர் இதை மறுக்கின்றனர். அதிகாரப்பூர்வமற்ற முறையில் அக்கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், ஜெட்லியை குறிப்பிட்டு பல ஆவணங்கள் உள்ளன. தற்போது ஒரு அறிக்கை தான் வெளியாகியுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் பல முறைகேடுகள் நடந்துள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நிச்சயம் ஜெட்லி தப்பிக்க முடியாது என்றார்.
 
இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து ஜெட்லி மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், பொது மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது உண்மை வெளிவந்துள்ளது. அறிக்கையில் ஜெட்லி பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே கெஜ்ரிவால் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், கோர்ட்டில் தனது தவறை ஒத்துக்கொள்ள வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.