அநாகரீகமாக நடந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமான்

ஊடகத்துறையினரி டம் அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் .

சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்த பின் விஜயகாந்தை சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி எசெய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விஜயகாந்த் விசாரித்து நியூஸ் – 7 தொலைக்காட்சி என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும், உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா? என்று பதில் கேள்வி எழுப்பினார். கோபத்தில் நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்களா தூ என்று துப்பினார்.

இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

மழை வெள்ளத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கும் விழாவில், இளையராஜாவிடம், சிம்புவின் பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட நிருபரைப் பார்த்து, உனக்கு அறிவிறுக்கா?

என்று கேட்டதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிருபர்கள் கொந்தளித்தனர். இப்போது விஜயகாந்த் கேள்வி கேட்டவர்களை காரித்துப்பியுள்ளார். இது முதல் முறையல்ல. இதுபோன்ற செயல்களில் அவர் அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே செய்து வருகிறார். ஆனால், அவரை மன்னிப்பு கேட்கும்படி ஒருவரும் கோரவில்லை. அவர் உலகமகா தலைவர் என கொண்டாடப்படுகிறார். காரித்துப்பிய செயலுக்கு விஜயகாந்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஆவேசமாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .