விஜயகாந்த்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்திய பாட்டில் வீச்சு… உருவபொம்மை எரிப்பு போராட்டம்!

 
 
புதுச்சேரியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தங்கி இருந்த தங்கும் விடுதியில் பாட்டில் வீசியும், உருவபொம்மை எரித்தும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆர்ப்பாட்டம் நடத்த இடத்துக்கு எதிரே பேருந்து நிறுத்தத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு இருந்த படத்தை அகற்றும்படி விஜயகாந்த் கூறினார். இதையடுத்து உடனே தே.மு.தி.க. தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை அகற்றினார்கள்.
 
இந்த தகவல் அறிந்து அங்கு திரண்டு வந்த அ.தி.மு.க.வினர் கோபத்தில் அப்பகுதியில் இருந்த தே.மு.தி.க. பேனர்களை கிழித்து எரிந்ததுடன் தே.மு.தி.க.வினர் வாகனங்களையும் தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
மேலும், கடலூரில் தே.மு.தி.க. சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று இரவு புதுச்சேரி வந்து தங்கினார். அவர் காமராஜர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.
 
 
இந்நிலையில், இன்று காலை விஜயகாந்த் கடலூர் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அ.தி.முக. எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் 100 பேர் அண்ணாமலை தங்கும் விடுதி முன் திரண்டு வந்தனர். வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 
அப்போது, அ.திமு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் 100 பேர் அந்த ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள், அந்த ஓட்டலுக்குள் வாகனங்கள் செல்லும் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். பிரச்னை பெரிதாவதை அறிந்த தங்கும் விடுதி ஊழியர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் கேட்டை இழுத்து மூடினார்கள்.
 
அதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள், திடீரென விஜயகாந்த் உருவ பொம்மை ஒன்றை எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர். மேலும், தண்ணீர் பாட்டில்களை ஓட்டலுக்குள் தூக்கி வீசினார்கள்.
 
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அ.தி.மு.க.வினரை தடுக்க முயன்றனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அ.தி.மு.க.வினர் தங்கும் விடுதியின் 2 வாசல்களையும் முற்றுகையிட்டு, விஜயகாந்துக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தால் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால்அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது .