பொங்கல் பண்டியையொட்டி 3.35 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா

பொங்கல் பண்டியையொட்டி, 3 கோடியே 35 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் விலையில்லா வேட்டி சேலைத் திட்டத்தை 1983-இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். இதன்படி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
இந்தத் திட்டத்தில் தரமான பாலிகாட் வேட்டி, சேலைகளை வழங்க 2014-இல் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், 2016-இல் 1 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகளும், 1 கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகளும் ரூ.486 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளன.
 
இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய்த் துறைச் செயலர் இரா. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .