சென்னை கோவை நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை:

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளையும், நவீன வசதிகளையும் கொண்ட 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.48 ஆயிரம் கோடி செலவிட மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டிய ‘ஸ்மார்ட்’ நகரங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 12 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் அமையவிருக்கும் ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான வரைவு அறிக்கையை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

ஆனால் தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்பு இருந்ததால், திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த பட்டியலை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள இந்த வரைவுகளை தலா 2 நிபுணர்கள் கொண்ட 3 குழுக்கள் மூலம் மத்திய அரசு ஆய்வு செய்யும். பரிசீலனையின் முடிவில் இந்த நிதி ஆண்டில் நிதி உதவி அளிக்கப்படும் ‘ஸ்மார்ட்’ நகரங்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.