இன்று சர்வதேச வேட்டி தினம்: பாரம்பரியத்தைக் காக்க வேண்டுகோள்

சென்னை:
இன்று சர்வதேச வேட்டி தினம் என்று கொண்டாடப் படுவதை முன்னிட்டு, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணிந்து வரவேண்டும் என்று பல தரப்பிலும் வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலக சங்க தலைவர் கணேசன் கூறும்போது, தலைமைச் செயலகத்தில் சுமார் 2,500 ஆண்கள் பணியாற்றுகிறார்கள். வேட்டி தினத்தை யொட்டி இன்று ஒருநாள் மட்டும் அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்

புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேட்டி அணிவதை, ஜனவரி 6-ந் தேதி சர்வதேச வேட்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்து, உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் உடையான வேட்டியை கட்ட வேண்டும் என்பதற்காக ஒரு விழா நடத்துவது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் ஆகும். அந்நிய நாட்டவர்கள், நம் தேசத்தின் தொன்மையை கேள்வியுற்று, அவற்றை காண பல ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளாக தினமும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் நம் கலாசார பழக்க வழக்கங்களால் கவர்ந்து இழுக்கப்பட்டு நம்மை போல் வேட்டி, சேலை ஆகியவற்றை அணிந்து மகிழ்கிறார்கள். ஆனால், நம்முடைய பாரம்பரியத்தை நாம் முற்றிலும் மறந்து கொண்டு இருக்கிறோம்.

எனவே, நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்துவிட வில்லை என்பதை உணர்த்தும் விதமாக சர்வதேச வேட்டி தினத்தன்று, முதியோர், இளைஞர் என்று வேறுபாடு இல்லாமல் அனைவரும் நமது பாரம்பரிய உடையான வேட்டியை உடுத்த வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.. என்று கூறியுள்ளார்.