பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறக்க ஜெயலலிதா உத்தரவு

சென்னை:

பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 30–11–2015 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஏற்கெனவே ஆணையிட்டேன்.

அவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் கால அளவு 8–1–2016 உடன் முடிவதால் கால நீட்டிப்பு செய்து வழங்குமாறு மேற்கண்ட மாவட்டங்களிலுள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு கால நீட்டிப்பு செய்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.