திருப்பதியில் கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய காங்கிரஸ் தொண்டர்!

திருப்பதி:

திருமலை திருப்பதி கோயிலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தனது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியானது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெரபுரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சுரேஷ் (36) சோனியா, ராகுல் காந்தியின் வெறித்தனமான ரசிகராக உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சோனியா, ராகுல் காந்திக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தச் செய்தி, சுரேஷ் மனதை பெரிதும் வேதனைப்படுத்தியதாம்.

இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமின் கிடைக்க வேண்டும் என்றும் அவ்வாறு கிடைத்தால் தனது கை விரலை வெட்டி காணிக்கையாகத் தருகிறேன் என்றும் திருப்பதி ஏழுமலையானிடம் சுரேஷ் வேண்டிக்கொண்டுள்ளார். அவரது வேண்டுதல் நிறைவேறியதால், சுரேஷ் கடந்த மாதம் 25ஆம் தேதி திருப்பதி சென்று, அங்கு தனது இடது கை சுண்டு விரலை வெட்டி உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

முன்னதாக துண்டித்த கையை புகைப்படம் எடுத்துக் கொண்டார். விரலுடன் ரூ.1000 மற்றும் தனது முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் கூடிய கடிதம் ஒன்றையும் இணைத்து உண்டியலில் போட்டுள்ளார்.

இந்தத் தகவல் 15 நாட்களுக்குப் பிறகுதான் வெளியே தெரிய வந்தது. ஆனால் கைவிரல் காணிக்கை உண்டியலில் விழுந்தது குறித்து திருப்பதி கோயில் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.