ஜல்லிக்கட்டு அனுமதிக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு: வழக்கு தொடர முடிவு

புது தில்லி

ஜல்லிக்கட்டு போட்டி நடக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு பீட்டா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அது முடிவு செய்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத நிலையில், அவசர சட்டம் பிறப்பித்தாவது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதனால் தங்களுக்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு பகுதிகளில் காளைகளையும் தயார் செய்தனர்.
இதனால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்து அட்டார்னி ஜெனரலுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக, வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கி மத்திய அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு, தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன. இருப்பினும், மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களை ஆலோசிக்காமல் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், மத்திய அரசு வெளியிட்ட ஆணை செல்லாது. மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்றும், பீட்டா இந்தியா அமைப்பின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.