காஷ்மீரில் புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஆளுநர் ஆட்சி அமல்

ஜம்மு :

காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும் மறைந்த முதல்வர் முப்தி முகம்மது சயீத்தின் மகளுமான மெகபூபா முப்தி, முதல்வராக பதவியேற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார். இதனால், அவர் முதல்வராக பதவியேற்கும் வரை ஆளுநர் ஆட்சி அமலில் இருக்கும் என அம்மாநில ஆளுநர் என்.என். வோரா அறிவித்துள்ளார்.

காஷ்மீர் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத் மறைவுக்குப் பிறகு அவரது மகள் மெகபூபா முப்தி தான் அடுத்த முதல்வராக வர உள்ளார் என கூறப்பட்டது. இதற்கு கூட்டணி கட்சியான பா.ஜ.,வும் ஆதரவு தெரிவித்தது. இதனால் மெகபூபா காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக அவர் பதவியேற்பார் என்று கூறப்பட்டது. இவ்விழாவில் பா.ஜ., பொதுச் செயலாளர் ராம் மாதவ் கலந்து கொள்ள உள்ளதாகவும்கூறப்பட்டது.

இந்நிலையில், தாம் முதல்வராக பதவியேற்க மெகபூபா மறுப்பு தெரிவித்துள்ளார். சயீத் மறைவைத் தொடர்ந்து காஷ்மீரில் 4 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த துக்க காலம் முடிந்த பிறகே பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக மெகபூபா கூறி உள்ளார். இதனால் ஜனவரி 10 ம் தேதி மாலை அல்லது ஜனவரி 11ம் தேதி மெகபூபா முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெகபூபா தனது தந்தையில் திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உள்ளார். அந்த இழப்பின் பாதிப்பில் இருந்து மீண்டு வர அவருக்கு சில காலம் ஆகும் என மெகபூபாவின் அலுவலக தகல்களும் தெரிவிக்கின்றன.