திருமலை நாயக்கர் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: ஜெயலலிதா

சென்னை:
மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் மணிமண்டபங்களை அரசு ஏற்படுத்தி பராமரித்து வருகிறது.
பல்வேறு பெருமக்களின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரட்டைமலை சீனிவாசன் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டதன் பேரில் ஆண்டுதோறும் இவ்விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்ற மன்னர் திருமலை நாயக்கர் அவர்கள் 1584 ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளன்று பிறந்தார்.

அவர் வீர உணர்வு மிக்கவர். எதிலும் தொடர்ந்து போரிடும் மனவலிமை வாய்ந்தவர். அவர் சிறந்த அறநெறியாளரும் ஆவார்.

மன்னர் திருமலைநாயக்கர் சிறந்த சமய நெறியாளர். நாட்டில் நிலவி வந்த பண்புக்கும் மரபுக்கும் மதிப்பளித்தவர். மதுரை மாநகரை விழா நகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்தவர்.
திருமலை நாயக்கர் சிறந்த கட்டடக் கலை வல்லுநர். அவரால் எழுப்பப்பட்ட ராஜகோபுரங்களும், மண்டபங்களும், கோயில்களும் மற்றும் அவரது அரண்மனையும் இன்றும் இதனைப் பறைசாற்றி வருகின்றன.
திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அரண்மனை தான் திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் விடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற வகையிலும், மன்னர் திருமலை நாயக்கரின் நினைவைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையிலும், மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள், அவர் பிறந்த நாளான தைப்பூசத் திருநாள் அன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக மதுரையில் கொண்டாடப்படும்.

இதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருநாளான 24.1.2016 அன்று மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் மதுரையில் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளேன்.