செல்ஃபி எடுத்த பெண் கடலில் தவறி விழுந்து மாயம்

மும்பை:

மும்பையில் செல்ஃபி எடுக்கும்போது இளம்பெண் ஒருவர் கடலில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்று, கடலில் குதித்த இளைஞரும் மாயமானார். இருவரையும் மும்பை பாந்த்ரா போலீஸாருடன் இணைந்து, தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

மும்பை பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் சனிக்கிழமை காலை 10.50 மணி அளவில் இளம்பெண் தாராணம் அன்சாரி (18) தன் நண்பிகளான அஞ்சும் கான், கசூரி கான் ஆகிய இருவருடன் கடற்கரை அருகே நீர்ப் பாதையில் உள்ள பாறையில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கடல் அலை மிக உயரமாக எழுந்ததால் அனைவரும் கடலில் தவறி விழுந்தனர். அவர்களது கூச்சலைக் கேட்டு அவ்வழியாகச் சென்ற ரமேஷ் என்பவர் கடலில் விழுந்தவர்களை மீட்டக் குதித்தார். அவர் கசூரி, அஞ்சும் இருவரைக் காப்பாற்றி கரையில் விட்டுவிட்டு தாரானம் கானைக் காப்பாற்ற முயன்றபோது பெரிய அலையில் சிக்கிக் கொண்டார். கடல் அலையில் சிக்கிக் கொண்ட ரமேஷ் மற்றும் தாரானம் ஆகிய இருவரையும் தேடும் பணி ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்து வருகிறது.

இந்தப் பெண்கள் மூவரும் கோவண்டி கிழக்குப் பகுதியின் கிராமப் புறமான பைங்கான்வாடியில் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவிகள்.