நாடு முழுவதும் ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டிய பியர்ல்ஸ் நிறுவன தலைவர் உள்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல்

 
மிகக் குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி நாடு முழுவதும் 5 கோடி முதலீட்டாளர்களிடம் 45 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியதாக பியர்ல்ஸ் குழு நிறுவன தலைவர் நிர்மல் சிங் பாங்னு, அதன் துணை நிறுவனங்களின் அதிகாரிகள் சுக்தேவ் சிங், குர்மித் சிங், சுப்ரதா பட்டாச்சாரியா ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். இந்த நால்வரும் நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரும் பெருமளவில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்து உள்ளனர். எனவே இவர்களை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு உண்மையும் தெரியவரும்“ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹர்வீந்தர் சிங், பியர்ல்ஸ் குழு நிறுவன அதிகாரிகள் 4 பேரையும் 10 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.