இங்கிலாந்துக்கு எதிரான டி20யில் விளையாட உள்ளதால், கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரப் பயிற்சியில் இறங்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. மான்செஸ்டரில் நேற்று நடந்த பயிற்சியில் விராத் கோலி, ஷாட் பிட்ச் பந்துகளைச் வீசச் சொல்லி அதிகப் பயிற்சி எடுத்தார். அயர்லாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டி20 போட்டியிலும் விராத் அதிக ரன் குவிக்கவில்லை. எளிதாக விக்கெட்டை இழந்துவிட்டதால் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டார். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அவரை கவனித்துக்கொண்டார்.
ஷிகர் தவானுக்கு, நெட்டில் வழக்கமாக பந்துவீசும் உள்ளூர் வீரர்கள் வீசினார்கள். அதில் பயிற்சிப் பெற்ற தவான், பிறகு புவனேஷ்வர்குமாரை வீசச் சொன்னார். அவர் வீசிய ஷார்ட் பந்துகளில் அடித்து ஆடினார். ஆனால் பந்து அவரை பதம் பார்த்தது. லேசாகப்பட்டதால் தப்பித்தார். அனைத்து பந்துகளையும் அசால்ட்டாக விளாசி அசத்தினார் அவர்.
இன்றும் பயிற்சியை தொடர்கிறார்கள் இந்திய வீரர்கள். பயிற்சியில் நேற்று ஈடுபட்ட வீரர்களை வைத்து, இவர்களெல்லாம் நாளைய ஆடும் லெவனில் இருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.



