ஜெயலலிதா தண்டனை பெறும் சூழல்; அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் கூட்டணி: ராமதாஸ்

மேட்டுப்பாளையம்:

முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெறும் சூழல் உள்ளது; அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் மட்டுமே கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

உதகையில் நடைபெற்ற பசுந்தேயிலை விலை உயர்வு குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், கோவை செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

கரும்புக்கான கொள்முதல் விலை ரூ. 2,850 என உயர்த்தி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள ரூ. 1,000 கோடியை வழங்காமல், தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையைக் கருதி, கரும்பு டன்னுக்கு ரூ. 4000-ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட பிப்ரவரி 2-ஆம் வாரத்தில் விருப்ப மனு வழங்கப்படும். அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும்.

2ஜி வழக்கில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இதில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தண்டனை பெறுவர். முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெறும் சூழ்நிலை உள்ளது என்றார்.