பாஜக., பிரமுகர் கல்யாணராமன் கைதுக்கு ராம.கோபாலன் கண்டனம்

 சென்னை: ஒருதலைப் பட்சமாக முகநூல் கருத்துக்கு கைது செய்யும் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்  என்று, பாஜக., பிரமுகர் கல்யாண ராமன் கைதுக்கு இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கல்யாணராமன் தனது முகநூல் பக்கத்தில் விவாதத்தின் போது தெரிவித்த கருத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் செயல்பாடு ஒருதலைபட்சமானது, சட்டவிரோதமானதும் கூட. உச்சநீதிமன்றம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குக் கைது செய்யக்கூடாது என உத்திரவிட்டுள்ளது. இதனையும் மீறி முஸ்லீம் அமைப்பினரை திருப்திப்படுத்த இதுபோன்ற செயல்களில் காவல்துறை ஈடுபடுவது விரும்பத்தகாத செயல்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடும் என எச்சரிக்கிறோம்.

இந்து இயக்கத்தினர் மீது அவதூறு பரப்பியும், இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தியும், ஆன்றோர்களை களங்கப்படுத்தியும் செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதற்கு நூற்றுக்கணக்கான புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையையும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளத்தக்கது. உதாரணமாக இஸ்லாமியப் பெண்களை கற்பழிக்க நான் கூறியதாக பொய்யான தகவல்களைப் பரப்பி களங்கம் ஏற்படுத்தி, வன்முறையைத் தூண்டியது குறித்து காவல்துறைக்குப் புகார் கொடுத்ததற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட வில்லை. அது மட்டுமல்ல, கொலை மிரட்டல் குறித்த கொடுத்த புகார்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தியதாகவோ, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதகாவோ எந்த தகவலும் இல்லை. நாம் கொடுக்கும் புகார்கள் கிணற்றில் போட்டக் கல்லைப்போல காவல்துறை வாங்கி வைத்துக்கொள்கிறது.

அதிமுக அரசு பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் முஸ்லீம் அமைப்புகளின் ஏவலாளாக தமிழக காவல்துறை செயல்பட தமிழக முதல்வர் செயல்படுத்தவிட்டார் என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாகக் காட்ட முடியும். இதுவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போவதற்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது.

கருத்துரிமை பேசுவோர் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்டது என்றால் காணாமல் போய் விடுகிறார்கள்.  அதுதான் இடதுசாரிகளின் கோமாளித்தனமான போராளித்தனம். இந்த விஷயத்திலும் தமிழக அரசு முஸ்லீம்களின் அடாவடித்தனத்திற்கு அடிபணிந்துள்ளது. இது ஊடகத்துறைக்கும், கருத்துரிமைக்கும் எதிரான தளத்தை உருவாக்க தமிழக அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாய விரோதமானது. ஊடகத்துறைக்கு விடப்படும் அச்சுறுத்தல் என்பதை கவனத்தில் கொள்ள பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, தமிழக அரசும், காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.