ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை : அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

 
ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ திமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடு தயாராக இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது .பொங்கல் பண்டிகை தமிழக மக்களின் உணர்வோடு கலந்த ஒன்றாகும். எனவே ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். தமிழக மக்கள் சார்பாக இந்த அவசர சட்டத்தை விரைவாக கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
 
ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தை மத்திய அரசு சட்டப்பூர்வமாக அணுக வேண்டும் என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.மேலும் ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியும் என்று கூறிஉள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
 
தமிழக மக்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆளும் அதிமுக அரசு தவறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை ஏதும் விதிக்கப்படமாட்டாது என்ற வார்த்தைஜாலமும், சவடால் பேச்சும் தற்போது என்னவானது?மேலும், அதிமுக அரசு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அதிமேதாவிபோல் செயல்படுவதாலேயே, இதுபோன்ற சட்ட ரீதியான பிரச்சனைகளில் அடிக்கடி சிக்கிக்கொண்டு, தமிழக மக்களின் உரிமையை இழந்து வருகிறது என்று விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பாஜக தலைவர் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்
 
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ள நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று பா.ஜ. க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ஜல்லிக்கட்டை எதிர்த்து வழக்கு போட்டுள்ளனர். சட்ட ரீதியாக ஆராய்ந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழிசை உறுதியளித்துள்ளார்.மேலும் இந்த ஆண்டு பொங்கலுக்குள், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கும்.என்றும் தெரிவித்துள்ளார்,
 
பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமனி
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மத்திய அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமனி வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ்
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்து 2014 ஆம் ஆண்டு மே 7&ஆம் தேதி உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் இவ்விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு தவறான நம்பிக்கையை தரும் செயல்களிலும், சட்டத்தின்முன் செல்லுபடியாகாத நடவடிக்கைகளிலும் மட்டுமே ஈடுபட்டனவே தவிர, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
 
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழக மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான மாற்றுவழிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும். மத்திய அரசின் நிர்வாக ஆணைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், புதிதாக அவசரச்சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்திருக்கும் யோசனையை செயல்படுத்த முடியுமா? என மத்திய அரசு ஆராய வேண்டும். உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது என்று ஒதுங்கி விடாமல் ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு
 
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
 
மதிமுக பொதுச் பொதுச் செயலாளர் வைகோ
 
ஜல்லிக்கட்டு பிரச்சனையை மத்திய அரசு முறையாக அணுகவில்லை. ஒப்புக்காக அறிக்கை வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வரும் ஒப்புக்கு கடிதம் எழுதி காலங்கடத்தியதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் தலையில் இடியாக இறங்கிவிட்டது உச்சநீதிமன்ற தடை என வைகோ கூறியுள்ளார்.மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது ஒப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
 
ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராதது ஏன் எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது எதிர்பார்த்ததுதான் என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் அரசுகள் இறங்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன்
 
மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்,