சென்னையில் புதிதாக 126 இ-சேவை மையங்கள் திறப்பு

சென்னை:
சென்னையில் புதிதாக 126 இணைய சேவை மையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இணைய சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்திவருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த மையங்களில், அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தலாம். அரசின் நலத் திட்ட உதவிகளையும், இதர சேவைகளையும் பெறலாம்.

இந்த நிலையில், சென்னை மாநகரில் உள்ள 126 வட்ட அலுவலகங்களில் புதிதாக 126 அரசு இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், காணொலிக் காட்சி முறையில் இந்த மையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் கு. ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலர் தா.கி. ராமச்சந்திரன், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மையங்களின் மூலம், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த் துறையின் 16 சேவைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட சமூகநலத் துறையின் 13 சேவைகள், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை தொடர்பான 6 சேவைகள், சென்னை மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல் ஆகிய 4 சேவைகள், அரசின் இதர திட்டங்களான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணி தேர்விற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 54 சேவைகளைப் பெறலாம்.

அனைத்து அரசு இணைய சேவை மையங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தைச் செலுத்தும் வசதியையும் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

சென்னை மாநகரில் இணைய சேவை மையங்கள் வாயிலாக இதுநாள் வரை சுமார் 1 கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.