லண்டன்:
பாதுகாப்பு அதிகாரிகளிடம் முஸ்லிம் பெண்கள் தங்கள் புர்காவை விலக்கி முகம் காட்ட வேண்டும்; மேலும் இங்கிலாந்தில் குடியேறும் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
பிபிசியின் ரேடியோ 4-க்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்து:
“முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கி, தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் காட்டி, உதவி புரிய வேண்டும். பயங்கரவாதத்தை சமாளிக்கும் நம் நாட்டின் முயற்சிக்கு நீங்கள் உதவ வேண்டும்.
நீதிமன்றங்கள், குடியேற்ற சோதனை மையங்கள் போன்ற இடங்களில் இதனைக் கடைபிடியுங்கள். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணிய உரிமை உள்ளது. ஆடை சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
நாட்டில் குடியேறியும், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாத முஸ்லிம் பெண்களுக்கான குடியுரிமையை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்படும்.
– இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 28 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது அரசு. இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லிம் பெண்கள் ஆங்கிலத் திறனில் பேச குறைந்த அளவோ அல்லது தெரியாமலோ உள்ளனர் என அந்நாட்டு அரசுப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டேவிட் கேமரூன் கருத்துக்கு அந்நாட்டில் சிலரிடம் எதிர்ப்பு கிளம்பாமலும் இல்லை. விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர்.
இது குறித்த செய்தித் தொகுப்பு காணொலி: