நாளை பெட்ரோலிய விற்பனையாளர்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்

சென்னை: நாடு முழுவதும் ஏப்.11 சனிக்கிழமை நாளை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது…. நாடு முழுவதும் 53,000 பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த சில்லறை விற்பனையாளர்களுக்கு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1.22-ம் கொள்முதல் விலையை விட அதிகம் வைத்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி நியாயமான”டீலர் மார்ஜின்’ வழங்க வேண்டும். நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கழிப்பறை பராமரிப்பு குறைபாட்டுக்காக அபராதம் விதிக்கப்படுவதில்லை. ஆனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமானதல்ல. எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் அளித்துள்ள குத்தகை நிலத்தை திரும்பப் பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும். மேலும், விற்பனை நிலையங்களில் எண்ணெய் நிறுவன லாரிகளிலிருந்து பெட்ரோல், டீசல் பெறும்போது, அதன் அளவை கண்காணிக்க ரசீதுடன் கூடிய அளவீட்டுக் கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவ வேண்டும்… இவை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஏப்.11 அன்று கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.