பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் பணி நீக்கம்

திருநெல்வேலி: களக்காடு அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா ரவிபுதூரைச் சேர்ந்த சுப்பிரமணியன்(54) களக்காடு அருகே உள்ள சூரங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த செப்டம்பரில் தன் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் கூறினர். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க களக்காடு சரக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைத்தனர். அதன் பேரில்,நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனசுந்தரம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை பணி நீக்கம் செய்ய இயக்குனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது. இது குறித்து மேல்முறையீடு செய்ய சுப்பிரமணியனுக்கு 2 மாத அவகாசம் அளிக்கப்பட்டது.