உறுதியாகிறது அதிமுக., பாஜக., கூட்டணி!

Published:

edappadi modi - 2026

அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறுகிறது! அதில், பாஜக, புதிய தமிழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியானதாகத் தகவல் வெளியானது. பாமக. மட்டும் இழுபறியில் உள்ளது என்று தெரிகிறது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

தேமுதிக 4 இடங்கள் என்றும், பாஜகவுக்கு 9 இடங்கள் என்றும் பேசப் பட்டதாகக் கூறப் படுகிறது. பாமக நிலை மட்டும் உறுதியாகவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நேற்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி கூட்டணி குறித்து மறுப்பு தெரிவித்தார். வழக்கம் போல் பாமக.,வின் துவக்க கால பேரம் பேசும் உத்தியை இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிக்க அன்புமணி தனது தந்தை ராமதாஸைப் போல் முயன்று வருகிறார்.

பேச்சுவார்த்தை நடக்கிறது எனச் சொன்னேன் ஆனால் யாருடன் என நான் சொல்லவில்லை. அதிகாரபூர்வமாக நானோ மருத்துவர் ஐயாவோ சொல்லாத பட்சத்தில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக அறிவிக்காத பட்சத்தில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

திமுக., அதிமுக., இரு தரப்பிலும் பாமக., கூட்டணி குறித்துப் பேசிவருவதாக வெளியான தகவல் அதன் பழைய பேரம் பேசும் உத்தியை வெளிப்படுத்துகிறது என்று விமர்சனம் எழுந்தது.

இதனிடையே, திமுகவுடன் கூட்டணி அமைவது உறுதி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உறுதி கூறியுள்ளார். பாமக குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், கூட்டணி குறித்து காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என பேசுகிறது பாமக என்று கூறியவர், அதிமுகவை மிரட்டி கூட்டணி வைக்க பாஜக முயற்சிக்கிறது ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

ஆனால், திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் மதிமுக.,வுக்கும் தலா ஒரு தொகுதியை மட்டுமே திமுக., ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் கூட, இருவருமே உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக., நிர்வாகிகள் கூறுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் இருவருமே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், திமுக., கூட்டணி உறுதி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img