சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, மத்திய அமைச்சராக இருப்பதால் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெறுவதாகவும், அப்பகுதியில் தடையை மீறி பலர் நுழைந்து கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாற்றியுள்ளார். அதாவது தமிழகத் தொழிலாளர்கள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாகவும், அதன் காரணமாகத் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் வெங்கைய நாயுடு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆந்திரம் மீது எந்த குற்றச்சாற்றையும் சுமத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் வெங்கைய நாயுடு, கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை கடத்தல்காரர்களாக சித்தரித்திருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிடப் பணிக்காக சென்று கொண்டிருந்த தமிழர்களை நகரி என்ற இடத்தில் பேரூந்தை வழிமறித்து ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சி உறுதி செய்திருக்கிறார். இதை அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு அதன் உண்மைத் தன்மையை ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும், மூத்த மத்திய அமைச்சரான வெங்கைய நாயுடு மாநில பாசத்துடன் உண்மையை மறைத்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதே பழி சுமத்த முயன்றிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இன்னொருபுறம் ஆந்திர துணை முதல்வரும், வனத்துறை அமைச்சரும் தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்கள். ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு ஆதரவாக செயல்படும்போது, அங்கு நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. 20 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் அம்மாநில காவல்துறையின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்திருக்கிறது. இதுகுறித்து ஆந்திரக் காவல்துறை தலைமை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், காவல்துறையினர் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு மாறாக இவ்வழக்கை ஆந்திரக் காவல்துறையே எப்படி விசாரிக்க முடியும்? என்றும் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா வினா எழுப்பியுள்ளார். இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்றாலே அதை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கொல்லப்பட்டோர் மீது ஆந்திர அரசு அவதூறு பரப்புவதும், அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திரக் காவல்துறை தலைமை இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையை ஆந்திர உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதே அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு இந்தப் பிரச்சினையில் அமைதி காப்பது ஏன்? என்பது புரியவில்லை. இன்னொரு புறம் இப்பிரச்சினையை தமிழக அரசு கையாளுவதைப் பார்க்கும்போது தமிழக அரசுக்கு முதுகெலும்பே இல்லையோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இதுதொடர்பாக ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையுமே தமிழக முதலமைச்சர் மேற்கொள்ளவில்லை. மாறாக சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறந்து விட்டிருப்பதை பெரிய உதவியாக சித்தரிக்கும் முயற்சியில் தமிழக அரசு மறைமுகமாக ஈடுபட்டுள்ளது. ஆந்திராவுக்கு எதிராக தமிழகம் கொந்தளிக்கும் நிலையில் அதை நீர்த்துபோகச் செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது. இந்தியாவின் மிகப்பெரிய போலி மோதல் கொலை வழக்கில் மத்திய அரசு இனியும் அமைதியாக இருக்கக்கூடாது. ஆந்திரக் காவல்துறையின் மனித உரிமைகளை மீறிய, மிருகத்தனமான செயலைக் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அத்துடன், இனியும் தாமதிக்காமல், வழக்கமான நடைமுறையை பின்பற்றி இந்தப் படுகொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கோ மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
தமிழர்கள் கொலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட ராமதாஸ் கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari