தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பாளையங்குறிச்சி கோவிலில் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் ஏப்.10, 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற வேண்டியும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், ஏப்ரல் 9ம் தேதி மாலை 6.00 மணி முதல் 12ம் தேதி காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்து வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக உரிய அனுமதி பெற்று நடைபெறும் தேர்தல் பிரசாரங்களுக்கு இந்த தடையுத்தரவு பொருந்தாது என்றும் அதேபோல திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தடை உத்தரவை முன்னிட்டு கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



