காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தரிசனம் செய்தார்.
அத்திவரதரை தரிசிப்பதற்காக மனைவி சவிதா உள்ளிட்ட குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்த ராம்நாத் கோவிந்த், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரத்திற்கு சென்றார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரும் காஞ்சிபுரம் சென்றனர். மாலை 3 மணி அளவில், கோயிலுக்கு வந்த ராம்நாத் கோவிந்த்திற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர், தனது குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார்.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி, நண்பகல் 1 மணி முதல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் தரிசனம் முடித்து திரும்பிய பிறகு மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.




