பதினெட்டாம் பேரு 02-08-2016 கலந்த சாதம்-

1914843_1149315091752824_8573352737394903724_n

ஆடிப் பெருக்கு -ஆடி-18 பதினெட்டாம் பேரு|02-08-2016
கலந்த சாதம்-நன்றி மங்கையர் மலர்.
ஆடிமாதம் பிறந்ததும் ஆனந்தம் பிறக்கும். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்ப மாதம். அம்மனுக்கு பூஜைகள் விழாக்கள் நடக்கும் மாதம். விவசாயிகள் அறுவடை முடிந்து நடவு வேலைகள் தொடங்கும் காலம். விவசாயிகளுக்க நீர் ஜீவநாடி. எனவே ஆற்றில் புது நீர் வருவதைக் கொண்டாடுவது ஆடிபெருக்கு. அன்று பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடைகள் உடுத்தி காவிரித் தாயாருக்கு பூஜைகள் செய்வார்கள். பலவித சித்ரான்னங்கள் செய்து உண்டு மகிழ்வார்கள். அதில் முக்கிய இடம்பெறும் சித்ரான்னங்களில் இதோ சில
வெல்லசாதம்

தேவை: அரிசி – 1 கப், பெரிய தேங்காய் – 1 மூடி, வெல்லம் – 250 கிராம், ஏலக்காய்த்தூள், முந்திரி – 5, திராட்சி – 10, பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை, நெய் – சிறிது.

 

செய்முறை: அரிசியைச் சாதமாக வடிக்கவும், தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தைப் பாகு வைத்த தேங்காயுடன் கலந்து கெட்டிப் பூரணமாகச் சுருளக் கிளறி இறக்கவும். அதில் ஏலத்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போடவும். சாதத்தை தாம்பாளத்தில் போட்டு பூரண கலவையைக் கலக்கவும். சிறிது நெய்விட்டு, பச்சைக் கற்பூரம் பொடித்துப் போட்டுக் கிளறிப் பரிமாறவும்.
புளிசாதம்

தேவை: அரிசி – 1 கப், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி – தலா அரை டீஸ்பூன், வெல்லம் – 1 துண்டு, வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு.

 

வறுத்துப் பொடிக்க: மிளகாய் வற்றல் – 4, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம், எள் – தலா 1 டீஸ்பூன், மிளகு – 5, தனியா – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து தட்டில் கொட்டிஆறவைக்கவும். வறுக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி, மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு போடவும். கொதி வந்ததும் வெல்லம் சேர்க்கவும். எண்ணெய்ப் பிரிந்து வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும். ஆறவைத்த சாதத்தை புளிக்காய்ச்சலில் கலந்து, வறுத்த வேர்க்கடலை போட்டுப் பரிமாறவும்.
தேங்காய் சாதம்
தேவை: அரிசி – 1 கப், தேங்காய்த் துருவல் – அரை மூடி, மிளகாய் வற்றல் – 2, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 5, கறிவேப்பிலை, நெய், எண்ணெய், உப்பு – தேவைக்கு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெயும், நெய்யும் ஒன்றாக வைத்து காய்ந்ததும் அதில் கிள்ளிய மிளகாய் வற்றல், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டுச் சிவந்ததும் முந்திரி போட்டு வறுக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் போட்டு சிறிது வாசனை வரும்வரை வதக்கவும், உப்பு போட்டு சாதத்தில் கலந்து பரிமாறவும்.
எலுமிச்சைப் பொடி சாதம்

தேவை – பச்சரிசை – 1 கப், எலுமிச்சைச் சாறு – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (சிறியது), இஞ்சி – 1 துண்டு (துருவியது) கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு.

 

வறுத்துப் பொடிக்க: மிளகாய் வற்றல் – 4, கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன்.

 

தாளிக்க: கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் தேவைக்கு.

 

செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். வெறும் வாணலியில் பொடிக்க வேண்டிய பொருட்களைச் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், பருப்புகளைப் போட்டு சிவக்க வறுபட்டதும், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி சாதத்தில் கலந்து, பொடித்த, பொடியையும் கலந்து வைக்கவும், வேர்க்கடலை அல்லது முந்திரி வறுத்துப் போடவும்.