சத்துணவு ஊழியர்கள் மீது காவல்துறை அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: சத்துணவு ஊழியர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்னன் வெளியிட்ட அறிக்கை: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்குவது, குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்குவது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவது, சத்துணவுக்கான உணவு மானியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கட்டப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் வேறு வழியின்றி ஏப்ரல் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (17-4-15) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பல்லாயிரம் பெண் ஊழியர்களும், ஆண் ஊழியர்களும் பங்கேற்று ஜனநாயக ரீதியில் நடத்திய மறியல் போராட்டத்தினை ஒடுக்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பெண் ஊழியர்கள் என்றும் பார்க்காது கொடுந்தாக்குதலை நடத்தியுள்ளனர். சென்னையில் மாநிலத்தலைவர் கே.பழனிச்சாமி கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசுப் பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்ட 1982 தொடங்கி கடந்த 32 ஆண்டு காலமாக தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சிகளே தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கவோ, ஓய்வு ஊதியம் வழங்கவோ, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தவோ திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழ்மை நிலையிலுள்ள சத்துணவு ஊழியர்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக தொடர்ச்சியாக உயரும் விலைவாசி, மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடும் நிலையில் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கான கோரிககைகளை முன்னிறுத்தி ஜனநாயக வழிமுறைகளில் பல ஆண்டுகளாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தொடர்ந்து போராடுகிற சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, காவல்துறையை ஏவிவிட்டு கொடுந்தாக்குதல் நடத்துவது, பணி நீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது அதிமுக அரசின் ஊழியர் விரோத, ஜனநாயக விரோத மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு போராடும் ஊழியர்கள் மீது அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடாமல், அவர்கள் முன்வைத்துள்ள பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, நியாயமான ஓய்வூதியம், சத்துணவுக்கான மானியத்தை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளின் நியாயத்தை கருத்தில் கொண்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வை ஏற்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.