ஸ்வாமி ஓங்காராநந்தர் – சத்தமில்லாமல் ஒரு சாதனை!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்
pujyasri omkarananda
pujyasri omkarananda

ஸ்வாமிஜியின் மறைவு பேரதிர்ச்சி தருவது. மிகுந்த துக்கம் தரும் நிகழ்வு. ஹிந்து தர்மத்துக்குப் பேரிழப்பு.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. பூஜ்ய ஸ்வாமிஜியின் தனித்துவம் என்பது அவரது குரல், வேதத்தின் கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகிய இரண்டு பெரும் பிரிவுகளிலும் ஆழ்ந்த ஞானம், ஸம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நிபுணத்துவம் முதலானவை.

குறிப்பாக, சமீபகால தமிழகத்தில் திருக்குறளில் காணப்படும் வேதாந்தக் கருத்துகளையும் சாஸ்திரக் கருத்துகளையும் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியது ஸ்வாமிஜி மட்டுமே. இதை அவர் ஆவணப்படுத்தியும் இருக்கிறார். இதற்காக, ஸ்வாமிஜிக்கு ஹிந்துக்கள் அனைவரும் – குறிப்பாக, தமிழ்நாட்டு ஹிந்துக்கள் – மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஸ்வாமிஜி அவர்களின் இந்தத் தொகுப்பு திருக்குறள் தியானம் என்ற பெயரில் கையடக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறத்துப் பால், பொருட்பாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 365 திருக்குறள்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குறளுக்கும் ஒத்த பொருளுடைய மேற்கோள்கள் அந்தக் குறளின் கீழேயே தரப்பட்டுள்ளன. இந்த மேற்கோள்கள் வேத மந்திரம், புராண இதிகாசங்களில் இடம் பெற்றுள்ள சுலோகங்கள் அல்லது தர்ம சாஸ்திர நூல்களில் உள்ள கருத்துகள் முதலானவை. இவை அனைத்தும் ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து திரட்டப்பட்டவை என்பதும், இந்த நூல்கள் அனைத்தும் திருவள்ளுவர் காலத்துக்கு முற்பட்டவை என்பதும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

omkarananda1
omkarananda1

இந்த தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மிக சிந்தனையையும், தார்மிக வாழ்க்கையையும், தத்துவ மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட நூல் திருக்குறள் என்பதை இந்தத் தொகுப்பு ஆணித்தரமாக நிரூபிக்கிறது.

ஸ்வாமிஜி மறைந்திருக்கலாம். ஆனால், தாம் என்ன செய்ய வேண்டுமோ, அந்தப் பணியை இந்த நூலின் மூலம் அவர் முழுமையாகவே நிறைவேற்றி இருக்கிறார்.

திருவள்ளுவருக்கு நாஸ்திகச் சாயம் பூசுவதும் திருக்குறளுக்கு பைபிள் அட்டை போடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருபவைதான். இத்தகைய முயற்சிகள் ஆஸ்திகர்கள் யாரையும் குழப்பப் போவதில்லை. எனினும், தற்காலத்திய இளைய தலைமுறையினர் – குறிப்பாக, வெளிநாடு வாழ் தமிழர்கள் – இவற்றுக்கு பலிகடா ஆகிறார்கள். திருக்குறள் மீது சிறிதும் பக்தி இல்லாமல், அதைப்பற்றி வாய்க்கு வந்த விதத்தில் பேசுபவர்களுக்கு நாம் பதில் சொல்வது வீண் வேலை. அதேநேரத்தில், நம் வீட்டுப் பிள்ளைகள் மனதில் திருக்குறள் குறித்த உண்மையான பார்வையை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த விஷயத்தில் ஸ்வாமிஜி நமக்கு அருளியிருக்கும் இந்தத் தொகுப்பு மகத்தானது.

மிகவும் உணர்ச்சிகரமான இந்தச் சமயத்தில் இந்தத் தொகுப்பைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது ஸ்வாமிஜியின் தனித்துவம் பற்றியது. ஆம், அவரது பல்துறை அறிவு, நினைவாற்றல், சிந்தனை ஆழம் ஆகிய அனைத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் இந்தத் தொகுப்பு.

ஸ்வாமிஜியின் நினைவுகளுடனும், நன்றியறிதல்களுடனும்,

  • வேதா டி. ஶ்ரீதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.