- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.
காவிரிப்படுகையான மாயவரத்தில் தேசிய துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது வகுப்புகள் முடிந்தவுடன் பள்ளி வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ‘ப்ரைவெட்’ ஹிந்தி வகுப்பில் ஹிந்தி கற்றுக் கொண்டேன்.
ஹிந்தியில் ‘ப்ராத்மிக்’ மற்றும் ‘மத்யமா’ தேர்வுகளை இரண்டாம் வகுப்பில் எப்படியோ தேர்ச்சிப் பெற்று ராஷ்ட்ரபாஷாவில் நுழைந்தேன். தேர்வுக்கு பணம் கட்டியவுடன் தான் ‘ மௌகிக்’ ( வைவா) என்னும் விஷயமும் அதில் இருந்தது, புரிந்தது. அந்த வயதில் ‘விவா, பூஸ்ட்’ குடித்தே வளர்ந்ததால் ‘வைவா’ பற்றி அறியவில்லை. அதனால் முறையாக ஹிந்தி கற்றுக் கொள்ள முடியாமல் நிறுத்தி விட்டேன்.
பின்னர், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உபயோகத்தில் ‘ ருகாவட் கேலியே கேத் ஹை’ ( தடங்கலுக்கு வருந்துகிறோம்), ‘பானி கா மோல் பஹசானியே’ (நீரின் அருமையை உணருங்கள்) போன்ற வாக்கியங்களினால் மீண்டும் என் ஹிந்தி உயிர்ப்பிக்கப்பட்டது. பல ஜுனூன் தமிழில் வந்த சீரியல்களின் தாக்கத்தினால் அவைகளின் ஹிந்தி மூலத்தை அறிய நான் ஹிந்தியிலும் சிறிது காலம் பார்த்ததால் ஹிந்தியும் கொஞ்சம் புரிய துவங்கியது.
என் திருமணத்திற்கு பிறகு என் குடும்ப ராஜ்யத்தின் பாஷையாக மராட்டியும், வெளிவட்டார பாஷையாக ஹிந்தியும் இருக்கின்றது. இன்றும் நான் பேசும் ஹிந்தியை கேட்பவர்கள், ” நீங்கள் மதராஸியா?” எனக் கேட்க தயங்குவதில்லை. இன்னும் ஒரு சிலர், ” உங்களுடைய திருமணம் காதல் திருமணமா? உங்கள் கணவர் நன்றாக மராட்டியே பேசுகிறார், உங்களுக்கு ஹிந்தி கூட தாளம் போடுகிறது!”, என்று சூசகமாக கூறும் போது ” ஆம்! காதலுக்கு கண்ணோடு சேர்ந்து மொழியும் இல்லை,” என்று சொல்ல நினைப்பேன், என் செய்வது! ஒரு புன்னகையே பதிலாக கொடுத்து விடுகிறேன்.
இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருவதனால் 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஹிந்தி தினத்தை முன்னிட்டு கீழ்வரும் வரிகளை எழுதினேன்…
ஹிந்தியே…
இன்று உன்னை நான் பேசும்போது…
நீங்கள் தென்னிந்தியரா?
என்று வினவுபவர்களே….
ஒரு நாள் தென்னகத்து
மங்கையின் சொற்களில்
குடியேறிய ஹிந்தி மொழி என
உனக்கும் அடையாளம் தரும் நாள்
வெகு தொலைவில் இல்லை என …
ஹிந்தி தினத்தன்று
சபதம் ஏற்கிறேன்.
ஆனால், வேறு வழியில்லை, ஹிந்தியும் வரவில்லை, தமிழும் போச்சு
இதே மாதிரி எழுதி மனதை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
இதற்கிடையில் ஹைதராபாத் கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான் நடத்திய ‘தென்னிந்திய நாட்டுப்புற காவியங்களில் தேசிய உணர்வு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான நடந்த கருத்தரங்கில் நான் ஹிந்தியில் என்னுடைய கவிதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப் பட்டது. எனக்கு ஹிந்தியில் கவிதை எழுத வருமா என ஒரு சந்தேகம் வந்தது. என் கணவரும், என் இரண்டு பையன்களும் எனக்கு உற்சாகப் படுத்தினர்.
முதலில் நான் தமிழில் கவிதையை எழுதினேன். பின்னர், அதை ஹிந்தியில் எழுதி நான்கு பேர்களிடம் என் கவிதையை காட்டி பிழைகளை திருத்திக் கொண்டேன். பின்னர், ஹைதரபாத் சென்று என் ஹிந்தி கவிதையை வாசிக்க, அந்த சபையில் கூடியிருந்தோரும் என் கவிதையை ரசித்து மகிழ்ந்தனர். அத்தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
‘தமிழ்’ என்னும் மூன்றெழுத்து உயிர் நாடியாகவும், ‘ஹிந்தி’ என்னும் மூன்றெழுத்து என் தற்போதைய வாழ்வியலுக்கு அடித்தளமாகவும் இருக்கிறது என்பதே உண்மை.
வாழ்க நம் தமிழ் மொழி!! வாழ்க நம் நாட்டில் தோன்றிய ஹிந்தி மொழியும்!!