கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்
ஔவை நடராஜன் அவர்களின் இலக்கிய நந்தவனத்தில் இருந்து பூத்த மலர்கள் ஏராளம்! எல்லா மலர்களுமே இப்போது தமிழக மட்டுமல்லாது உலகம் எங்கும் மனம் பரப்பிக் கொண்டிருக்கின்றன…
திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம் என்று மேடைகளில் முழங்கும்பொழுது இவரின் இலக்கிய ஆளுமையைப் புரிந்து கொள்ளலாம். தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அருட்பா என சொற்பொழிவு ஆற்றும் போது இவருடைய ஆன்மிக, சமய சன்மார்க்கப் புரிதலைத் தக்கபடி அறிந்து கொள்ளலாம்.
அரசு கோப்புக்களை எப்படி கையாளுவது?, மாநாட்டுத் தீர்மானங்களளை எப்படி அமைப்பது?, அறிக்கைகளின் சாரத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யும் வித்தைகள் என்ன? என்பதை எல்லாம் இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்… வேண்டியவைகள்.
அடுத்தவர்களின் திறமையை மதிக்கும் குணம், அதே நேரம் நல்லதை நாளெல்லாம் சொல்லுகிற வார்த்தை ஜாலம் இதெல்லாம் தமிழ் அறிஞர்களுக்கு ஔவை சொல்லிக் கொடுத்திருக்கும் பாடமாகும்.
என்னிடத்திலே அன்பு காட்டி, நல்ல விஷயங்கள் கலைமகளில் வெளியாகும் பொழுது உதவியாளர் மூலமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை வாழ்த்தியிருக்கிறார். நான் கலைமாமணி விருது வாங்கிய போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை!! இன்னும் பல உயரத்தைத் தொடுவாய் என ஆசீர்வதித்தது இன்னமும் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.
முத்தமிழ் போல் மூன்று மகன்கள். மருத்துவத்தில் மாமணியாய் விளங்கிய மனைவி. சிறப்பான நல்லதொரு குடும்பம் ஔவை அவர்களின் குடும்பம். பாரம்பரியமிக்க குடும்பம். தமிழ் அறிஞர் ஔவை துரைசாமியின் ரத்தினங்கள் இவர்கள். நல்ல தமிழால் நாடெல்லாம், நாளெல்லாம் பேசி மகிழ்ந்து, மகிழ்ந்து வருகின்ற குடும்பம்.
ஔவை நடராஜன் அவர்கள் மூன்று தமிழக முதல்வர்களால் பாராட்டப் பெற்றவர். மதுரையில் ஆசிரியராக இருந்தவர்; அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு வள்ளலார் மன்றத்தின் பொறுப்பாளர் ஆனார். பின்னர் அவருடைய வாழ்க்கை ஏறுமுகம் ஆனது.
மொழி பெயர்ப்புத் துறை இயக்குனர்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர்,தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என பல பதவிகள்ப் பெற்று ஐ.ஏ. எஸ். அந்தஸ்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராகவும் ஆனார். தமிழுக்கும்,தமிழ் சமூகத்திற்கும் ஔவை செய்த தொண்டு மகத்தானது!
அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கேப் பெரிய இழப்புதான்!
விண்ணுலகம் சென்றிருக்கிற ஔவை நடராஜன் அங்கேயும் தித்திக்கும் தேன் தமிழில் அங்குள்ளோருக்குப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்! எங்கு சென்றாலும் தமிழைச் சுவாசிக்காமல் அவரால் இருக்க முடியாது. எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகப் பெருமான் அருள் புரியட்டும்! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி