
கட்டுரை: பன்மொழிப் புலவர் அமரர் கா.ஸ்ரீ.ஸ்ரீ
பாரதியார் தமிழிலே மிக உயர்ந்த தேசீயக் கவி, பக்த கவி, இயற்கையைக் கண்டு பாடுபவர், கட்டுரையாளர், புதுப்பாணியின் பிரவர்த்தகர் என்பதெல்லாம் உண்மைதான், ஆனால், இவையெல்லாவற்றையும்விட அதிகமாக இவர் கரைகடந்த ஓர் தத்துவஞானி என்பதே என் துணிபு. அவருடைய வாழ்க்கை, ஓர் உண்மையான தத்துவ ஞானியின் தொழில் முறையும் நலமும் பொருந்திய வாழ்க்கை, அவருடைய கலையின் ரகசியம், அவருடைய வாழ்க்கைத் தத்துவத்திலே மறைந்திருக்கிறது. தன் சுதந்திரமான ஆனால் பரந்த மனன சக்தியாலும், புதிய ஆளால் இயற்கையான பாஷையினாலும், காட்டாறு போன்ற ஆனால் எளிய நடையினாலும் அந்த இலக்கியச் சிற்பி தமிழின் புதிய கலாபவனத்தை நிரூபித்தான்.
பதஞ்சலி யோக சூத்திரத்தின் உரை, வேத ரிஷிகளின் கவிதை, கண்ணன்பாட்டு, கீதையின் முன்னுரை முதலியனவற்றைப் பன்முறை படித்திருந்தும் எனக்குச் சலிப்பு ஏற்பட்டதே இல்லை. வட இந்தியா காலக்கிரமத்திலே தன் மறுமலர்ச்சிப் பித்தில் தன் நாட்டில் தோன்றிய பக்த கவிகளை மறந்து, பக்தி இலக்கியத்தையே புறக்கணித்தும் விடலாம்; ஆனால், பக்தி நதியின் பணிவரையாகிய தென்னிந்தியாவில் அது எப்போதைக்குமே நடப்பது சாத்தியமில்லை.
பல மொழிகளடங்கிய இந்திய இலக்கியத்தில் ஒரு கவியின் ஸ்தானத்தைத் தீர்மானிப்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரதியாரின் காலத்தில் இந்தியாவில் வெவ்வேறு பாஷைகளுக்கும் புத்துயிரளித்த ‘கலைஞர்களின் நூல்களை ஆழ்ந்து படித்தோமாயின், நாம் இவ்விஷயத்தை ஒருவாறாக நிர்ணயித்துவிடலாம்.

வங்க இலக்கியத்தில் வசனநடையை ஆரம்பித்து வைத்தவர் வித்தியாசாகரர். வங்க மொழியின் நவயுக இலக்கியத்தின் ஆரம்பச் சரித்திரத்தில் பங்கிம் சந்திரரே முதல் ஸ்தானம் பெற்றவர். அவருக்கு முன்பு வங்க மொழியில் வசனநடை இருந்தது ஆனால், இலக்கியம் இல்லை. அவர் தமது நாவல்களில் ரஸ ஸ்ருஷ்டியைக் காட்டிலும் ஆதரிசத்தை ஸ்தாபிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டார். மைகேல் மதுசூதனதத்தர் (1824- 1873) மில்டனைத் தம் ஆதரிச புருஷராகக் கொண்டு காவியங்கள் இயற்றினார். இவர்களின் அப்தம் முடியுமுன்னமே ரவீந்திரநாதர் தோன்றிவிட்டார்.
பங்கிம் சந்திரர் 1894ல் இறந்துவிட்ட பின்பே பாரதியார் தமிழிலக்கியத் துறையில் இறங்கியிருக்கிறார். மதுசூதன தத்தரின் ‘மேக நாத வதம்’ அவருடைய காவியங்களிலே மிகச் சிறந்த அம்சமென்று புகழப்படுகிறது. பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ அதோடு போட்டியிடக் கூடியதாகவே அமைந்துள்ளது. பங்கிம் சந்திரரின் நாவல்களுக்கும் தத்தரின் காவியங்களுக்கும் மிகவும் நீண்ட ஆதரிசச்சரிதங்கள் வேண்டியிருந்தமையால், முந்தியவர் சிறுகதைகளும், பிந்தியவர் பண்ணிசையுடன் பாடக்கூடிய (சீதக்) காவியங்களும் இயற்ற முடியாமற் போயிற்று. பாரதியார் நாவல்கள் எழுதவில்லையாயினும், அவர் புனைந்துள்ள பாடல்கள் பலவும் பாடுதற்கேற்றன.
ஆகவே, பங்கிம் சந்திரருக்கு அடுத்த ஸ்தானத்தைப் பாரதியார் வகிக்கத் தகுந்தவர் என்பது புலனாகிறது. பாரதியாரின் காலத்திலே ேரவீந்திரரின் உதயத்தால் வங்க இலக்கியம் தமிழைக் காட்டிலும் மிக முன்னேறிவிட்டது.
ஹிந்தியின் நவயுகத் தூதரான பாரதேந்து ஹரிச்சந்திரர் பரதியாரின் காலத்தில் வாழ்ந்தார். அவருக்கு முன்பு ஹிந்தியில் வசன இலக்கியம் மலர்ச்சி பெறவில்லை. அவரது உரைநடையும் ஏறக்குறையப் பாரதியாரின் நடையையே ஒத்திருக்கிறது. அவரும் பாரதியாரைப் போலவே அக்காலத்தில், தமது முப்பத்தைந்தாவது வயதில் இறந்துபோனார், ‘வந்தேமாதரம்” என்ற பிரசித்தமான பாட்டு ஏழுகோடி வங்கத்தினர்களை நோக்கியே பாடப்பட்டது. தன் மாகாணப்பித்திலே வங்கம் இந்தியாவைப் புறக்கணித்து. ஆனால், பாரதேந்து நம் பாரதியாரைப் போலவே, பாரதத்தின் தாழ்நிலையைக் கண்டு கண்ணீர் உதிர்க்கப் பாரதவாசிகள் அனைவரையும் கூவி அழைக்கின்றார். பாரதியார், தாயின் மணிக்கொடியின்கீழ், செந்தமிழ் நாட்டுப் பொருநர் முதல் தாயின் பதத்தொண்டு நினைத்திடும் வங்கத்தினோர்’ ஈறாகப்பல மாகாணத்தினரும் சேர்ந்து அதைக் காப்பதாகப் பாடுகிறார்.
தமிழர்கள் வள்ளுவரையும், கம்பனையும், இளங்கோவையும் அறியாமல் போளதோடு காளிதாஸனையும் பாஸ்கரனையும், பாணினியையும் சங்கரனையும், அசோகனையும் சிவாஜியையுங்கூட மறந்துவிட்டார்களே என்று வருந்துகிறார். “காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளஸீதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறன், ஆண்டாள் திருமொழி இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய சம்பத்து’ என்கிறார். ஆனால், பாரதியாரைப் போல் கவிதை வளர்ச்சிக்குரிய வேலையைப் பாரதேந்து செய்யவில்லை. ஹிந்தியில் பாரதேந்துவுக்குப் பின் மஹாவீரர் பிரஸாத் த்விவேதி செய்த வேலையிலே ஒரு பகுதியையும், கவிவாணர் மைதிலி சரண்குப்தர் செய்த வேலையிலே ஒரு பகுதியையுங்கூடச் சேர்த்து முடித்துவிட்டார் நம் பாரதியார். ஆகவே பாரதியார் நமது காலத்திலே ஹிந்தியிலே வாழ்ந்த பாரதேந்துவைக் காட்டிலும் மேன்மையான ஸ்தானத்தைப் பெற்றுவிட்டார்.
குஜராத்தி மொழியின் நவயுகத்தைச் சிருஷ்டித்த கவி நர்மதா சங்கர் என்பவர். அவர் இறந்து இப்போது 54 வருடங்கள் (1886ல் மறைந்தார், 2022ல் இப்போது 139 வருடங்கள்) ஆகிவிட்டன. குஜராத்தில் இன்னும் நர்மதயுகம் முடியவில்லை. ஜயஜய கர்வி குஜராத்!“ என்ற பிரசண்டமான ஒலி குஜராத் முழுவதிலும் பரவியது. பாரதியாரைப் போலவே வீராவேசங் கொண்டவர் நர்மதர். எந்த யுகத்தின் நடுப்பகலில் இன்று நாம் நிற்கிறோமோ அதன் உஷத்காலத்திலே தோன்றியவர் அவர். வருங்கால குஜராத்தை ஓர் ஆதரிச நாடாக்க வேண்டுமென்று அவர் பாடுபட்டார். ஹிந்து, மகமதியர், பார்சிகள், கிறிஸ்தவர்கள் – இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்குரிய குஜராத் அல்ல அது. எல்லோரும் சுதந்திரத்துடனும் சம உரிமையுடனும் வாழத்தக்கது அது. குஜராத்துக்கு அவர் ஊட்டிய ஊக்கம், புதிய சைதன்யம், அவருடைய சீர்திருத்தப் புயல் – இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது தமிழ் நாட்டில் அவருக்கு இணையான வேலையைச் செய்தவர் பாரதியார் தான் என்பது தெற்றென விளங்கும்.
பாரதியாகும் அவரைப் போலே ஒரு தீர்க்கதரிசி. நர்மதனின் கவிதைகளிலே காணும் சௌந்தர்ய உணர்ச்சி பாரதியாரின் சிறந்த கவிதைகளிலும் காணலாம்.
மராட்டியில் புகழ் பெற்ற கவிராயர் கேசலஸுதருடைய சில பாடல்களுக்கும் பாரதியாரின் பாடல்களுக்குமுள்ள ஒற்றுமை கண்டு நான் பன்முறை வியந்ததுண்டு. “தேசத்தின் விஷயமாகப் பேசிக்கொண்டே நாங்கள் துயிலையும் மறந்து இங்கே உட்கார்ந்தோம். எங்கள் சுவாஸத்தோடு சுவாஸம் கலந்தது கண்ணீரோடு கண்ணீர பெருகியோடியது. இந்த வீழ்ச்சி இரவு கழிந்து நாம் சுதந்திர விடிவோரையைக் காண்போமா?” என்ற கருத்துடைய அவர் பாடலுடன் பாரதியாரின் இப்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள்..
“எண்ணற்ற நல்லோ ரிதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
எந்தை சுயாதீனம் எமக்கில்லை யென்றால்
தீன ரெது செய்வோமே?””
ஆனால் பாரதியார் பல இடங்களில் தீரத்துடன் பேசுகிறார்.
வேதனைகளினி வேண்டா
விடுதலையோ திண்ணமே
திண்ணம் விடுதலை திண்ணம்” – என்பன அவர் வாக்குகள். சத்ரபதி சிவாஜியும், குருகோவிந்த சிம்ஹனும் அவருடைய அமர கீதங்கள்.
பாரதியாரின் காலத்தில் வாழ்ந்த தெலுங்கு வசனத்தின் தந்தை வீரேசலிங்கம் பந்துலுவைத் தமிழர்கள் அறிவார்கள். ‘சந்திரிகை’யிலும் பாரதியார் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தெலுங்கில் நாவல்களும் நாடகங்களுங்கூட எழுதியிருக்கிறார். ஆனால், அவருடைய கவிதைகள் மிக உயர்ந்தவை அல்ல.
கன்னடத்திலும் மலையாளத்திலுங்கூடப் பாரதியாரோடு போட்டியிட வல்ல கலைஞர் யாரும் அக்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.
இவ்விதம் ஆராயுமிடத்து, பாரதியார் தமது காலத்தில் வாழ்ந்த இந்தியக் கவிகளில் முன்னணியிலே இருந்தவரென்பதும், வசன இலக்கியத்தில் பங்கிம் சந்திரருக்கு அடுத்த ஸ்தானத்தைப் பெறத்தக்கவரென்பதும் நன்கு புலப்படுகின்றது. அக்காலத்தில் இரண்டு விஷயங்களில் அவரை விஞ்சியவர் யாருமில்லை: ஒன்று, வீராவேசத்தோடு கூடிய அவருடைய நாட்டன்பு; மற்றொன்று, தத்துவ ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட அவருடைய பிரதிபையும் மேதையும்.
பாரதியாரின் காலத்துக்குப் பின்பு தமிழின் வேகம் குறைந்தது; மற்ற மொழிகளின் வேகம் அதிகரித்தது. ஆனால்..?
ஆனால் பாரதியாரின் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழ் இலக்கியம் பல துறைகளிலும் முன்னேறி வருகிறது. அரசியல் விழிப்பிலே இன்று தமிழ்நாடு முன்னணியிலே நிற்கின்றது. கூடிய விரைவிலே நம்மிடமுள்ள குறைகள் யாவும் நீங்கி நாம் பூரணநிலை எய்தும் நாளை எதிர்பார்த்து நிற்போமாக!
தமிழன் தன் தீவினையால் பாரதியாரை அகாலத்தில் இழந்துவிட்டானெனினும், அவர் தம் ஸ்தானத்தில் தம்மைப் போன்ற சிலரைச் சிருஷ்டித்து விட்டே சென்றார்.