கி.வா.ஜ. நினைவில்…

என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக்  குறுகிய காலத்திலேயே சென்னை வாழ்க்கை சில பல படிப்பினைகளைத் தந்தது என்றாலும், மூத்த இதழாளர்களின் வழிகாட்டலும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்தது பெரும் பேறு.
ஒரு சிலரை பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில்தான்  படித்திருந்தேன் என்றாலும், அவர்கள் தொடர்புடையவர்கள் அல்லது சீடர் குழாமை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதும் பெரும் பேறுதான்.
இலக்கிய யாகம் வளர்த்த தென்காசியில் ரசிகமணியின் பெயரனார் தீப.நடராஜன் உள்ளிட்டோருடன் ஒரு தொடர்பு இருந்ததென்றால், நம் ஊர்க்காரர் என்று சொல்லிச் சொல்லியே உரம் ஏற்றப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கமும் ஏ.என்.சிவராமனும் பத்திரிகையியல் தாகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இருந்தாலும், தமிழ்த் தாத்தா என்று உ.வே.சா. உரம் ஏறிய அளவுக்கு அவர் சீடர் பெயர் மனத்தில் பதியாமல் போனது. பள்ளிக்கூடப் புத்தகத்தில் அவர் பெயர் அழுத்தமாய் ஏறாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும் ஓரளவு வயது வளர்ந்த நிலையில், சிற்சில ஏடுகள் அந்தப் பெயரைப் பளிச்சிட்டுக் காட்டின.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் கலைமகள் காரியாலயத்தில் காலடி வைத்த பிறகுதான் கி.வா.ஜ., என்ற அறிஞரின் பெருமையும் திறமையும் எனக்குள் பிடிபட்டது. அதுவரை வெறுமனே கி.வா.ஜ. என்றால் அவரின் சிலேடைகள் என்று மட்டுமே பதியப் பட்டிருந்தது. ஆனால், தமிழ் உலகுக்கு அவர் அளித்த கொடைகளைப் பார்க்கையில், எட்டவியலாத் தொலைவுதான் என்று தோன்றியது.
மஞ்சரி இதழாசிரியராக இருந்த லெமன் என்ற லெட்சுமணன் ஐயாதான், அப்போது உடன் இருந்த எனக்கு கி.வா.ஜ.வின் இயல்புகள், அவர் தமிழறிஞர்கள் எழுத்தாளர்களிடம் நடந்துகொண்ட விதம், அவர்களுடனான உரையாடல்கள் என பலவற்றைச் சுவையாகச் சொல்லி மகிழ்ந்தார். கலைமகள், கண்ணன் இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு.
கலைமகள் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சுமார் ஐந்து வருடங்கள், அந்த நூலகத்தில் இருந்த பழைய கலைமகள் இதழ்களில் இருந்து அவருடைய இதழியல் நுணுக்கங்களை உணர்ந்து கொள்ள முற்பட்டிருக்கிறேன். அவருடைய கதைகள், இலக்கியக் கட்டுரைகள் என்னைக் கவர்ந்திருந்தாலும், ஏதோ ஓரளவு தமிழ் படித்திருந்த எனக்கு அவரின் விடையவன் பதில்களே பெரிதும் கவனத்தை ஈர்த்து, தமிழ் இலக்கணத்தைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தியிருந்தது. வாசகர்களின் இலக்கண, இலக்கிய, தமிழ்ச் சொல்லாடல்களின் ஐயங்களுக்கு அவர் அளித்த விடைகள் அவ்வளவு அற்புதமானவை.
கி.வா.ஜ.வின் இலக்கியக் கட்டுரைகளில் அவர் சங்க இலக்கியப் பாடல்களுக்கு அளித்திருக்கும் விளக்கமே அலாதியானதுதான். படிக்கத் தொடங்கினால் தமிழ் நடை தெளிந்த நீரோடை போல தட்டுத் தடங்கின்றி எங்கும் தேங்காமல் சென்று கொண்டேயிருக்கும்.

கி.வா.ஜ. பிறந்த நாள் நினைவுக் கட்டுரை : மரம் அனையான்

ஒரு நாள் ஒளவைப் பிராட்டியார், ஒரு வீட்டுக்குப் போயிருந் தார். அங்கே ஒரு பெண்ணின் அழுகைக் குரல் கேட்டுக் கொண் டிருந்தது. அந்தப் பெண்ணின் கணவன், அவளை அடித்துக் கொண்டிருந்தான். ஒளவையார் உள்ளே எட்டிப் பார்த்தார். அந்தப் பெண் சிறந்த அழகியாக இருந்தாள்.

“”அட பாவி! இவ்வளவு அழகான மனைவியைப் போட்டு அடிக் கிறானே? அவன் மனிதன்தானா? அல்லது மரமா? இவனுடைய கைகள் கட்டைகளைப் போல் இருக் கின்றன. அவற்றால் இவளைப் போட்டு அடிக்கிறானே?” என்று ஒளவைப் பிராட்டிக்கு இரக்கம் உண்டாயிற்று.

“”ஏன் அப்பா, இந்த அழகியை அடிக்கிறாய்?” என்று கேட்டாள். “”இவளை அடிக்கும் உரிமை எனக்கு உண்டு. இவள் நான் சொன்னபடி செய்யவில்லை! இவள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன?” என்றான். “”நீ என்ன சொன்னாய், இவள் அதைச் செய்யவில்லை?” என்று கேட்டாள் ஒளவை. “”இவள் நினைத்துக் கொண்டால் கோயிலுக்குப் போய்விடுகிறாள். அங்கே சாமியிடம் வரம் கேட்கப் போகிறாளோ? வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் சாமி தரிசனம் என்ன வேண்டிக் கிடக்கிறது?”

“”கோயிலுக்குப் போவது நல்ல காரியந்தானே! பெரியவர்கள் எல்லாம் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று சொல்லி யிருக்கிறார்களே & இறைவன் திரு வருள் கிடைத்தால் எல்லா நன்மை களும் உண்டாகும்” என்றாள் ஒளவைப் பாட்டி. “”அதெல்லாம் உன்னைப் போன்ற கிழவிகளுக்கு ஏற்ற காரியம். இவள் கோயிலுக்குப் போனால் பல வீட்டுப் பிள்ளைகள் இவளைக் கண்டு கண் அடிப் பார்கள். அது முறையாகுமா? அதனால்தான் இவளைக் கோயிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறேன்” என்றான் அவன்.

அவன் நல்ல வழியில் நடப்பதாகத் தெரியவில்லை. ஒளவைப் பிராட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது. யாரை நோவது? “”இந்த அழகான பெண்ணுக்கு மரத்தைப் போன்றவனைக் கணவ னாகும்படி தலையில் எழுதிய பிர மனைத்தான் கோபிக்கவேண்டும்” என்று எண்ணினாள். அந்தப் பிராட்டியினுடைய கருத்து ஒரு பாடலாக உருவெடுத்தது.

அற்றதலை போக அறாத்தலை
நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ & வற்றல்
மரம்அனை யானுக்கிந்த மானை
வகுத்திட்ட
பிரமனையான் காணப் பெறின்!
பிரமனுக்கு ஆதியில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெரு மானுக்கும் ஐந்து தலைகள் உண்டு. அதனால், “சிவனும் நானும் ஒன்று’ என்ற கர்வம் பிரமனுக்கு உண்டா யிற்று. அதனை அறிந்த சிவ பெருமான் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அந்தத் தலையின் கபாலத்தைக் கையில் ஏந்திக் கொண்டார். அதனால் அவருக்குக் கபாலி என்ற பேர் வந்தது. ஒளவைப்பிராட்டி இந்த வரலாற்றை எண்ணிப் பாடினார்.
சிவபெருமான் கிள்ளிய ஒரு தலை போக, மற்ற நான்கினையும், கையால் இறுகப்பற்றிப் பறிக்க மாட்டேனோ? உயிரற்ற கட்டை போன்ற இந்தக் கொடியவனுக்கு, மானைப் போன்ற மென்மை உடையவளை மனைவியாக அமைத்த பிரமனை நான் கண்டால், “அறாத்தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ?’ என்று பின் முன்னாகக் கூட்டிப் பொருள் காணவேண்டும்.
இந்தப் பாடலைக் கேட்ட பிறகாவது அந்த மரம் அனையான் திருந்தினானோ இல்லையோ, யார் அறிவார்?