December 5, 2025, 3:35 PM
27.9 C
Chennai

புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகப்புருஷன் பாரதி..!

‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’

தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி பாரதி. தமிழன்னையின் ஈராயிரமாண்டுத் தவப்பயன் அவனை அவள் புதல்வனாகப் பெற்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

‘இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்’ – என்று தனது உறுதிமொழிதனை எழுதிவைத்தவன் பாரதி.

பாரதியின் பன்முக ஆளுமை என்பது இன்றைக்கும் தமிழுலகத்தை வியப்பில் ஆழ்த்துகின்ற ஒன்றுதான். தமிழ்மொழிக்கு புத்தம்புதிய ரத்தம் பாய்ச்சிய அவனது இலக்கியப் பங்களிப்பு மகத்தானது. பக்திமயமாகவும், சிற்றரசர்களை – பிரபுக்களை ஏற்றிப்பாடிப் பரிசில்கள் வேண்டிநின்ற சிலேடைகளுமாகவும் நோய் பீடித்து இளைத்துக்கிடந்த தமிழன்னைக்குப் புத்துயிர்கொடுத்த தனயன் பாரதிதான். அவனால் தமிழுக்குப் புதிய ஞானமும், ஒளியும் தோன்றிற்று, இது மறுக்க முடியாத உண்மை.

வெறும் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலைமட்டும் அவனது தேசியப்பார்வை கொண்டிருக்கவில்லை. மாறாக, தேசத்தின் அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையையும் இணைத்தே நோக்குகிற தெளிவு அவனுக்கு இருந்தது.

“இந்நாட்டவன் என்ற நாட்டுரிமை உணர்வு இல்லாமல் அரசியல் உணர்வு இருக்கமுடியாது. எங்கே சாதி அமைப்புமுறை பரவி இருக்கிறதோ, அங்கே நாட்டுரிமை உணர்வு இருக்காது…” – ‘இந்து’ பத்திரிகையிலே அவன் எழுதிய ஆங்கிலக் கடிதங்களில் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. அதில் பாரதி மேலும் சொல்கிறான்:

“இங்கிலாந்தில் உரிய தகுதிகள் வாய்க்கப்பெற்ற, அந்நாட்டுக் குடிமகனாகிய சக்கிலியின் மகன் ஒருவன் பிரதம மந்திரியாவதற்கு எவ்விதத் தடைகளும் கிடையாவென்பதைப் பற்றி அங்குள்ள மக்களில் எவனும் ஐயப்படமாட்டான். சமஸ்கிருத சாஸ்திரங்களில் ஈடு இணையற்ற அறிவும், விழுமிய ஒழுக்கப் பண்பும், பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக வரமுடியும் என இந்தியாவில் எவனாவது நம்பினால், அது தேசத்துரோகமாகக் கருதப்படும் அல்லவா? (சூத்திரனே வர முடியாது என்றால், பஞ்சமனைப் பற்றிச் சொல்லவே வேண் டாம்.) மக்கள் ஏன் வேண்டுமென்றே தம் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள்? மலைக்கும் மண் புற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் கண்டுணர மறுப்பது ஏன்? மகத்தான இங்கிலாந்துப் பேரரசு எங்கே? அந்தோ, இந்தியா எங்கே?”

– இப்படிக்கூறுகிற துணிவு இன்றைக்கு நமக்கு இருக்கலாம். இது கணினியுகம், 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு – சமுதாயத்தில் இருள் மண்டிக்கிடந்த அன்றைய அடிமைத் தேசத்தில், சாதியத்தின் பிடிப்பு இறுகிக் கிடந்த காலத்தில் இதைச் சொல்ல எவ்வளவு ஆன்மபலம் தேவைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெறும் அரசியல் விடுதலை கோரி நின்றவர்களும், சமூக சீர்திருத்தம் மட்டுமே போது மென்றிருந்தவர்களும் எதிரெதிர் முகாம்களாகப் பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொண்டிருந்த சூழலில், பாரதியின் சிந்தனை மட்டுமே அரசியல் விடுதலையைச் சமூக விடுதலையோடு இணைக்க முயன்றது. அவன்தான் விடுதலை என்பதை பறையருக்கும், புலையருக்கும், பரவருக்கும், குறவருக்கும், மறவருக்குமானது என்று ஓங்கி முழங்கினான். “முப்பது கோடியும் வாழ்வோம்! வீழின், முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!” – என்றவன் அவனல்லவா?

ஏற்றத்தாழ்வின் அடிப்படைகளைக் கிள்ளி எறியச் சொன்னான். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம், மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி இருத்தலாகாது என்றவன், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி – உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான். சாதியால் ஒருவனைத் தாழ்வாகப் பேசுவதுமட்டும் பாவமல்லவாம்!. உயர்ந்தவன் என்று தண்டனிட்டு அடிமை செய்வதும்கூடப் பாவமாம்! இப்படியொரு முழுமையான சீர்திருத்தக் கோட்பாட்டினை அழுத்தமாக முன்வைத்த முன்னோடி பாரதி. ‘காக்கை, குருவி எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்!’ – என்று ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன் மொழியும் தகுதியை அதனாலேயே அவன் பெறுகிறான்.

சமூக விடுதலையின் பிரிக்கமுடியாத அம்சங்களான தலித் விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை அந்த நாளிலேயே இவ்வளவு துணிவுடனும், நேர்படவும் பாரதி மட்டுமே பேசி, அந்த மரபைத் துவக்கி வைக்கிறான்.

சாதிய அமைப்புக்கு எதிரானது சாதியக் கலப்பு. சாதியக் கலப்புக்கு வழிவகுப்பது காதல். எனவே காதலுக்கு மரியாதை செய்தவன் பாரதி. “காதல் செய்வீர் உலகத்தீரே! அதுவன்றோ தலைமை இன்பம்!” என்று அறை கூவி அழைக்கிறான் பாரதி. இளம் விதவைப் பெண்களை இந்நாட்டு இளைஞர்கள் மனமுவந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் வேண்டுகிறபோது, அவனது மனம் இன்னும் விசாலமானதென்று புரிகிறது.

அதேபோலத்தான் ஆண் – பெண் சமத்துவம் கோரித் தடம்பதிக்கிறது அவனது பெண் விடுதலைக்கான பயணத்தின் பாதையும். கற்பு என்று ஒன்று வலியுறுத்தப்படுமாயின் அதனை ஆண் – பெண் இருபாலருக்கும் பொதுவானதாக வைக்கவே வலியுறுத்துகிறான் அவன். அதாவது, வரலாற்றில் முதன் முதலாக கற்பென்ற கருதுகோளை ஆணுக்கும் வலியுறுத்திய தலையாய ஆண்மகன் அவனே!

பாரதியின் இத்தனை சிறப்புகளுக்கெல்லாம் சிகரம் எது தெரியுமா? அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவைத் திட்ட சுயசாதி விமர்சனம். ஆம்! இன்று வரையில் அவனளவுக்கு வேறு ஒருவர் தம்சாதி குறித்து இத்தனை தெளிவாகப் பேசியிருக்கிறாரா?

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!’ என்று விடுதலை பெற்ற புதிய காலத்தைக் கும்மி கொட்டிக் குதூகலித்து வரவேற்க அன்று எவ்வளவு தைரியம் வேண்டும்? எண்ணிப் பார்த்தால் மலைப்பாகத்தானே இருக்கிறது! அது மட்டுமா? ‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’ – என்று, தான் பிறந்த சாதியின் மீதே தயங்காமல் குற்றம் சுமத்த வேறு எவரால் இன்று வரையில் இயன்றிருக்கிறது?

இப்படியும் அவன்தானே சொன்னான்:

‘சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங்கள் சொல்லுமாயின் அவை
சாத்திரங்கள் அல்ல சதியென்று கண்டோம்!’

பாரதி தன்னலத்தோடு சற்றே நினைத்திருப்பானேயானால், அவனது சுடரொளி வீசிய அறிவுக்கும், அவன் பிறந்த சாதிக்கு அன்று இருந்த செல்வாக்கிற்கும் ஆங்கில அரசிடம் எத்தனை பெரிய பதவியை அடைந்திருக்க முடியும்? இப்படியா பெண்டு, பிள்ளைகளைப் பட்டினி போட்டுவிட்டு, ஒரு பரதேசிபோல அலைந்திருக்க வேண்டும்? அவனிடம் சுய நலமும் இருந்ததில்லை! சுயசாதிப் பற்றும் இருந்ததில்லை! இதுதானே உண்மை? நிலைமை இப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே அவனை வெறுத்து ஒதுக்க நினைப்பதுவும் இன்னொரு வகை வர்ணாசிரமம் ஆகாதா?

இன்றைய நம் சமூகத்தில் பெருநோயாகப் புரையோடிக்கிடப்பது சாதிய ஏற்றத்தாழ்வு அல்லவா? அதனை அன்றைக்கே சாடத் துணிந்த பாரதி நமக்கெல்லாம் என்ன செய்தியை விட்டுச்சென்றிருக்கிறான்? நாம் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கும் சாதியை அவனைப்போல விமர்சனப்பூர்வமாக அணுகியிருக்கிறோமா? இப்படி நம்மை நாமே கேட்டுக் கொள்வது, இன்றைய நம் சமுதாயச் சிக்கல்களைக் களைவதற்கான ஒரு துவக்கமாக இருக்கும்தானே?

இந்திய சமூகத்தில் சாதிய முறையானது படிநிலை – ஏணிப்படி போன்ற அமைப்பாகத்தானே இருக்கிறது! கடைக்கோடியில் எல்லா சாதிகளும் அமுக்கி அழுத்திக்கொண் டிருக்கும் தலித்துகளை தவிர, மற்ற எல்லா சாதியினரும் தமக்குக் கீழே ஏறி மிதிக்க ஒரு சாதி உண்டு என்ற நினைப்பில் அல்லவா வாழ்கின்றனர்? இந்தப் பெருமித நினைப்பைக் கேள்விக்குள்ளாக்காமல் எப்படி சாதிய ஏற்றத்தாழ்வு ஒழியும்?

வரலாற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற நியாயமான ஏற்பாட்டை ஒட்டி மட்டுமே சாதி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. இந்த ஒரு தேவையைத் தாண்டி, சாதியின் நீடிப்புக்கு வேறு எந்தக் காரணமும் இருக்க நியாயம் இல்லை. எனவே, உயர்சாதி தொடங்கி எந்தச் சாதியானாலும் சாதியப் பெருமிதம் என்பது நாகரிக சமுதாயத்தில் வெட்கக்கேடான ஒன்றல்லவா?

ஒரு புதிய காலத்தின் பிறப்பை அறிவிக்கிற ஒளிமிக்க யுகப்புருஷனாகத் தோன்றியவன் பாரதி. அவனுள் நிறைய முரண்களும் இருக்கவே செய்கின்றன. கூர்ந்து நோக்கினால் அந்த முரண்கள் அவன் தோன்றிய சாதி – சமூக – கால சூழ்நிலைமைகளின் பிரதிபலிப்புகள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவன் காலத்து மனிதர்களில் ஆகப் பெரும்பாலானவர்களிடத்தில் மண்டிக்கிடந்த இருளுடன் புழங்கிய பாரதிதான் அதனைக் கிழித்துக்கொண்டு ஒளிமிக்க ஞானச்சுடராகக் கிளம்பிவந்தான் என்ற நேர்மறை அணுகுமுறையுடன் அவனைப் பார்ப்பதே மிகச்சரியான அறிவியல் பார்வையாக இருக்கமுடியும்.

பாரதியின் மகத்தான அறிவு, அவனது உழைப்பு, எதிலும் ஊடுருவி நின்ற அவனது பார்வை, அவன் பேணிய மனிதநேயம், அதனடிப்படையிலான சமூகநீதியை முன்மொழியும் அவனது தேசபக்தி இவை எல்லாமே இன்றைக்கும் நமக்கு வியப்பையும், வழிகாட்டுதலையும் தரக்கூடியனவாகவே திகழ்கின்றன.

– சோழ. நாகராஜன் – எழுத்தாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories