கடந்த சில ஆண்டுகளாக ஒரு விநோதப் பழக்கம் எனக்கு… ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விஷு) அன்றும், முதல்முறையாக ஒரு முருகன் கோவிலுக்குச் செல்வது என்பது… அதாவது அதுவரை பார்த்திராத, அன்றுதான் முதல்முறையாக அந்தக் கோவிலுக்குச் செல்வது… என்பது ஒரு பழக்கமாக கைக் கொண்டிருக்கிறேன். சென்னைக்கு வந்த இந்தப் பதினைந்து ஆண்டுகளில், சென்னையைச் சுற்றியுள்ள முருகப் பெருமான் தலங்களுக்கு இப்படிச் சென்றுவந்திருக்கிறேன். வெளியில் எங்காவது செல்ல இயலாவிட்டால்… சுற்றுப் புறத்தில் அருகே இருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுவது… முருகன் என்ற தமிழ்க் கடவுளுக்கு தமிழ்ப் புத்தாண்டு அன்று அர்ச்சனை செய்து போற்றி வழிபட்டு வருவது நல்லதுதானே.! இப்படி ஆண்டார்குப்பம், சிறுவாபுரி, அறுபடைவீடு முருகன், திருப்போரூர், கந்தக் கோட்டம், ஏழாம்படைவீடு என்று அன்பர்கள் அழைக்கும் திருவல்லிக்கேணி முருகன், குன்றத்தூர், குமரன்குன்றம், மயிலம் உள்ளிட்ட தலங்களுக்குச் சென்று வந்துள்ளேன். ஆனால், திருத்தணியும் வல்லக்கோட்டையும் இந்தப் பட்டியலில் டிக் செய்யப்படாமல் வெகுநாட்களாக அப்படியே இருக்கிறது. அறுபடை வீடுகளில் இன்னும் நான் தரிசனம் செய்யாமல் இருப்பது திருத்தணி… ஆனால், இம்முறை கட்டாயம் வல்லக்கோட்டை சென்றாக வேண்டும் என்று ஒரு விருப்பம். நேற்றே தயாராகி விட்டேன். நானும் வருகிறேன் என்றார் நண்பர் சரவணன். இருவரும் இன்று காலை வல்லக்கோட்டைக்குச் சென்றோம். முருகப் பெருமானின் அழகு வசீகரிக்கும் அழகு. இன்று முத்தங்கி வேறு சாத்தியிருந்தார்கள். வேலும் மயிலும் சேவற்கொடியுமாய் அழகனின் தரிசனம் முடித்து வழக்கம்போல் கோயில் செயல் அலுவலரைச் சந்தித்தேன். மிக மிக வித்யாசமாக, இதுவரை கோயில் செயல் அலுவலர் என்ற தன்மையுடம் இருக்கும் மற்ற எல்லா நபர்களிடத்தும் இருந்து விலகி, கருத்து விதைக்கத் தொடங்கினார். பேச்சின் இனிமையும், இலக்கிய ஆர்வமும் என்னை அவரின் பின்னணி குறித்து ஆராயத் தூண்டியது. முத்துராஜ் என்பது பெயர். குருப் 1 தேர்வெழுதி இப்போதுதான் நேராக வல்லக்கோட்டைக்கு வந்திருக்கிறார். சிவகங்கை மண்ணின் மைந்தர். சட்டம் படித்தவர். துளிர் என்ற இதழில் இதழாளராகவும் பணியாற்றியுள்ளார். என்னிடம் எழுத்தாளர் ஜெயமோகனின் சிற்சில எழுத்துக்கள் குறித்து சிலாகித்தார். நம் கை சும்மா இருக்குமோ? உடனே ஜெயமோகன் செல் அழைப்பில் வந்தார். அவருக்கு வழக்கம் போல் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு, அவரின் வாசகராக முத்துராஜ் சொன்ன பாராட்டுகளையும் ஜெ.மோ.வுக்கு தெரிவித்து விட்டு, அவரிடமே கைபேசியைக் கொடுத்தேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னே…. எழுத்தாளனும் வாசகனும் ஒருவர் ரசனையை ஒருவர் பாராட்டினால்தானே…!! ஆக… இன்று வல்லக்கோட்டை முருகப் பெருமானை தரிசிக்கப் போய்.. ஒரு இலக்கிய தாகம் மிகுந்த கோயில் செயல் அலுவலரையும் சந்தித்து வந்தாயிற்று. வரும் வழியில் வழக்கம்போல், சித்திரையில் செய்ய திருவாதிரை என்று இந்த நட்சத்திரத்துக்கே பெருமையைத் தேடித் தந்த எம்பெருமானார் ஸ்ரீராமானுஜரின் அவதாரத் தலத்தையும் கும்பிடு போட்டுவிட்டு, ஸ்வாமியின் அனுக்ரஹம் பெற்று வீடு வந்து சேர்ந்தேன்…
தரிசனம் : வல்லக்கோட்டை முருகன்
Popular Categories



