திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-2

காலை 6 மணிக்கு மேல்தான் பரமபத வாசல் செல்லும் இலவச தரிசன வரிசை அனுமதிக்கப்படும் என்று முந்திய தின இரவே போலீசாரால் சொல்லப்பட்டு விட்டதால், வழக்கமாக நாங்கள் செல்லும் வடக்கு வாசல் வழியாக நுழைந்தோம். தாயார் சந்நிதி முன்னுள்ள வடக்கு வாசல் பிரதான நுழைவுப் பகுதியில் கம்புகள் கட்டப்பட்டு, வழி அடைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் அதிகம் தென்பட்டார்கள். காலை சுமார் 7.30 அளவில் அங்கே திரண்டிருந்த பக்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் தற்போது டி.எஸ்.பியாகப் பொறுப்பேற்றிருக்கும் திருவாளர் கந்தசாமி.

சரி… வழக்கமான வாக்குவாதம்தானே! என்று கவனித்துக் கொண்டிருந்தேன். உள்ளூர் மாமிகள், வயதானவர்கள், பெரியவர்கள் என … அங்கே கூடியிருந்தார்கள். எல்லோரையும் ரங்கா ரங்கா வாசல் வழியாகத்தான் விடுவோம். நீங்கள் அங்கே செல்லுங்கள் என்று அதட்டிக் கொண்டிருந்தார் திருவாளர் கந்தசாமி. ஆனால் அவர்களோ… ஐயா.. வழக்கமாக நாங்கள் செல்லும் வழி இது. நாங்கள் பெருமாள் முத்தங்கி சேவைக்கு செல்லவில்லை. ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போக வேண்டும். உற்ஸவரை ஸேவிக்க… இதற்காக நாங்கள் அந்த வாசலுக்குச் சென்று எப்படி திரும்பவும் இதே இடத்துக்கு வர முடியும் என்று கேட்டார்கள். கத்திக் கொண்டிருந்த கந்தசாமி, நீங்கள்லாம் மனுசங்கதானா? சொன்னா புரியாதா? உள்ளே கூட்டம் அதிகம் இருக்கு. எல்லாரையும் வெளியேத்திட்டுதான் உங்களை எல்லாம் விட முடியும் என்று பதில் அளித்தார். தொடர்ந்து … மனுசங்களா இருந்தா மண்டைல ஏறும் என்றார்…
கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மண்டையில் ஜிவ் என்று ஏறியது!
பொதுவாக நான் போலீஸ்காரர்களை விரோதிகளாகப் பார்ப்பதில்லை. காவல்துறையினருக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணுபவன். ஆனால்… அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களை இப்படி ஆலயப் பணிக்கு அனுப்பி வைத்தால்.. இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று எண்ணும் படியாய்… மோசமான அணுகுமுறைகள்.
என் செல்போனில் இதை க்ளிக்கினேன். ஐயா டிஎஸ்பீயார் பார்த்துவிட்டார். ஓடி வந்து, என்ன வீடியோவா புடிக்கிற என்று செல்போனை பறித்துக் கொண்டார். எப்போதுமே என் அடையாளத்தை எங்கேயும் நான் சொல்லிக் கொள்வதோ, PRESS அடையாள அட்டையைக் காட்டுவதோ இல்லை. அதன் மூலமான சலுகையை எங்கும் எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால்… இப்போது இந்தக் கட்டாயச் சூழல் ஏற்பட்டதால், அடையாள அட்டையைக் காட்டினேன். அடுத்த நொடி செல்போனை கையில் கொடுத்தார். சார் உங்களால் முடிஞ்சத பாத்துக்குங்க என்றார். சிஎம் செல்லுக்கு வேணா அனுப்பறேன் என்று நான் புன்னகைத்தேன். அடுத்து அமைதியாக அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார். சற்று நேரம் ஆனது. மக்களின் நெருக்கடியே வென்றது. அதே வழியில் அடைக்கப்பட்டிருந்த கட்டைகளை எடுத்து ஓரிருவராக வரிசையில் வரச் சொல்லி உள்ளே விட்டனர்.
நானும் வரிசையில் நின்று கொண்டேன். ஒரு கிறிஸ்துவ போலீஸ்கார அம்மணி, வயதான மாமிகளை விரட்டி, வரிசை வரிசை என்று கத்தினார். கூடவே, இப்படியே போங்க.. பெருமாள் கூட்டுட்டுப் போவார் என்று இளக்காரமாகப் பேசினார். என்னைப் பார்க்காததுபோல் முகத்தை திருப்பிக் கொண்டு… ஒழுங்கா சொன்னா கேக்க மாட்டீங்க.. சொன்னா வீடியோ எடுத்துக்கிட்டு வம்பு பண்ணுவீங்க.. போங்க போங்க போய்ச் சேருங்க என்றார்.
ஆமாம்…
இதே மனநிலையில்தான்…
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க
செயல்படும் டிஎஸ்பி கந்தசாமியின் பேச்சை
வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டேன்….
ஸ்ரீரங்கத்தில் உள்ளோர் போலீஸ் அராஜகம் ஒழிக என்றார்கள்!
நானோ … ஆலயங்களை விட்டு அரசை விரட்டுவோம் என்று சொல்லிக் கொண்டேன்.