திருவரங்கம் வைகுண்ட ஏகாதசித் திருவிழா – அனுபவம் பகுதி-4

கருட மண்டபத்தில் பெருமானை மோஹினி அலங்காரத்தில் சேவித்ததிலும் சரி… இன்றைய தின ஆயிரங்கால் மண்டப தரிசனத்திலும் சரி… மிக மிக திருப்தியுடன் இருந்தது பெருமாளின் திவ்ய ஸேவை. உள்ளே கூட்டம் இல்லை. வெறிச்சோடி இருந்தது பல இடங்கள். பரமபத வாசல், தாயார் சந்நிதி, ஆயிரங்கால் மண்டபம் எல்லாவற்றிலு விரைவில் சென்று தரிசிக்க முடிந்தது. பெருமாளின் முத்தங்கி சேவையை தவற விட்டாயிற்று. கொடிமரத்தின் அருகிலேயே மக்களை நிறுத்தி வரிசை கட்டி, டிக்கெட்டுக்கு விட்டிருந்தார்கள்.

இவ்வளவு விரைந்து ஸேவிக்க வழி ஏற்படுத்திய காவல் துறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாராட்டோ பாராட்டு அவ்ளோ பாராட்டு!!

கோயிலுக்கு வெளியிலேயே மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

செயின் பத்திரம், செல்போன் பத்திரம், கழுத்தில் கவனம் இருக்கட்டும். உங்கள் அருகிலேயே டிப் டாப் ஆசாமிகள் இருப்பர். அவர்கள் திருடனாகவோ திருடியாகவோ இருக்கலாம். பொருள் போன பிறகு அழுது பிரயோசனமில்லை. உள்ளே கூட்டம் அதிகம் உள்ளது. சொர்க்க வாசலுக்கு செல்பவர்கள் ரங்கா ரங்கா கோபுரம் வழியாக செல்லவும்.

ராமானுஜர் சந்நிதி வழியை அடைத்து விடுங்கள். அங்கே பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையினர் கவனத்துக்கு.

– இப்படியாக ஓடிக் கொண்டிருந்தது அறிவிப்புகள்.

இதைக் கேட்ட உள்ளூர் அன்பர்கள் பெரும்பாலும் இந்த முறை ஓரங்கட்டி விட்டார்கள்.

காவல் துறை பாதுகாப்பு வேண்டும் தான்! ஆனால் இந்த அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ நிற்க வேண்டுமே என்று நின்று கொண்டிருந்தார்கள். பலர் செல்லில் ஜொள்ளிக் கொண்டிருந்தார்கள். பெண் காவலர்கள் சிலர் சாவஹாசமாக கால் நீட்டி அமர்ந்து, கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை இருந்தும், தங்கள் தலையிலேயே அடித்துக் கொண்டு, பக்த ஜனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டபடி, இதெல்லாம் தேவையில்ல சார் என்று கூறிய படியே புன் சிரிப்புடன் மக்களை நகர்த்திக் கொண்டிருந்த ஓரிரு காவலர்களையும் காண முடிந்தது. அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டபடியும் கட்டுப் படாத மனநிலையிலும் சிலர்….

***

உண்மையில், இத்தனை களேபரங்கள் தேவையில்லைதான்! கம்பு கட்டி விட்டிருக்கிறார்கள். வரிசையை ஒழுங்காக அமைத்து, தெற்கு, கிழக்கு, வடக்கு மூன்று வாசல்களிலும் மக்களை அனுமதித்து, அழகாக கூட்ட மேலாண்மையை அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கலாம்.

பரமபத வாசலா – வடக்கு வாசல்+ தெற்கு வாசல் வழி. பெருமாள் சேவையா – தெற்கு வாசல் + வடக்கு வாசல் வழி! ஆயிரங்கால் மண்டபமா – கிழக்கு கோபுர வழி… உள்ளே நுழைந்ததும், வரிசையை இரண்டாகப் பிரித்து, பரமபத வாசல் தனி, பெருமாள் சந்நிதி தரிசன வழி தனி என்று … இத்தனை நாட்கள் இருந்த நல்ல ஏற்பாடுதான்! ஆனால் இப்போது ஓரிரு வருடங்களாக மாற்றம் ஏனோ?

எல்லாருமே தெற்கு வாசல் வழியே மட்டுமே வர வேண்டும் என்று, ஒட்டு மொத்தமாக அனுப்பி, வரிசையை வடக்கு உத்தர வீதி வரை கொண்டு சென்று…

ஏன் இப்படி? என்ன சாதித்தார்கள் போலீஸார்?

இவர்களின் செயலால் கோயிலில் கூட்டம் அதிகம் என்ற கற்பனை வெளியில் பகிரப்பட்டது. ஆனால், உள்ளே எப்படி இருந்தது என்பதற்கு சில போட்டோக்களை பகிர்கிறேன்.

ஆக… எனக்குள் எழும் சந்தேகம் நிவர்த்தியாக வேண்டுமானால்… – யார் அந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது என்பதை காவல் துறை உடனே கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

கூட்டம் கூட்டம் என்று பூச்சாண்டி காட்டி… உள்ளே விட மறுத்து… இவர்கள் துரோகம் செய்தது – திருச்சி நகரைச் சுற்றியுள்ள சுத்துப்பட்டு கிராமத்து ஜனங்களைத்தான்!

அவர்கள் தான் உண்மையில் அரங்கனின் மேல் உயிரையே விடுபவர்கள். எத்தனை ஆசையுடன் பஜனை, ராம நாமம், ரங்க ரங்கா கோஷம் என அவர்கள் அந்த மணல் வெளியில் பொழுதைக் கழிப்பார்கள்??? அரங்கனை விட அந்த அடியார்களின் பக்தியைக் காண்பதில்தான் என்ன வோர் ஆனந்தம் இருந்தது.

ஆனால்… எல்லாம் பாழ் ! பாவம், அவர்கள் இரவு 11 மணிக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். காசு உள்ளவன் மூவாயிரத்தையும் கூடவே எதையும் கொடுத்து தன் டாம்பீகத்தை வெளிப்படுத்தி, நானும் பெருமாளை ஸேவித்தேன் தெரியுமோ? மூவாயிரம் ரூபா டிக்கெட்டாக்கும்… என்று பீற்றிக் கொள்வான். ஆனால் அந்தப் பரிசனங்கள்…?

தரிசனம் இன்றி தவித்துப் போனார்கள். !

எங்கு நோக்கினும், காகிகள்… உள்ளே வந்த வண்டிகள் அதிமுக கொடி கட்டிய பாஸ் வைத்த வண்டீகள், மற்றும் அத்தனை காவலர்களுக்கும் உணவுப் பொட்டலங்களை சுமந்து வந்த காவல் வண்டிகள். கோயில் உள்ளே பிரசாதங்கள் என்ற பெயரில் தேவஸ்தான கடைகளில் விற்கப்படும் புளியோதரை, பொங்கல், தயிர்சாதம், தோசை, தேங்குழல் வகையறாக்கள் மட்டுமே இருக்க்கும். ஆனால் இப்போதோ மண்டபங்களில் போலீஸ்காரர்கள் சாம்பார் பொட்டலங்களையும் சட்னி பொட்டலங்களையும் பிரித்து அங்கங்கே கொட்டிக் கொண்டிருந்தார்கள்…

காவல் துறை அதிகாரிகளுக்கு ஸ்ரீரங்க நகர்வாசிகள் போல் நானும் சொல்லிக் கொள்வது இதுதான்…! Crowd Management முறையாகக் கையாளுங்கள். இது அரசியல் கூட்டம் அல்ல. பக்தர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதே!