கடவுள் எவரையும் ஏமாற்றுவதில்லை!

Published:

செங்கல்பட்டு அவுட்டர்லதான் எங்க வீடு. கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. தொடர்ந்து சபரிமலைக்குப் போய்ட்டு வந்தோம் நானும் அப்பாவும். ஐயப்பன் பேர்ல ரொம்ப நம்பிக்கை வெச்சிருந்தோம். ஆனா… போன வருசம் அப்பா திடீர்னு தவறிட்டார். என்ன செய்யறதுன்னே தெரியல. நெறய செலவு செஞ்சு கஷ்டப் பட்டு படிக்க வெச்சார். வீட்ல அம்மா, தம்பி, தங்கச்சின்னு இருக்காங்க. நான் மூத்த பையன். குடும்பத்தைக் காப்பத்தணும்னு பொறுப்பு வந்திடுச்சி. பி.இ. இசிஇ படிச்சேன். ஆனா குடும்பத்துக்கு ஓரளவுக்கு தேவையான சம்பளம் கூட எனக்குக் கிடக்கல! காலேஜ்லேர்ந்து வெளில வந்து இதோ.. ரெண்டு வருசமாச்சி. நிஸான் கம்பெனில மெக்கானிக்கல்லதான் வேலை செய்தேன். ஓரளவுக்கு சம்பளம் வர்ற மாதிரி ஒரு வேலையை கொடுப்பான்னு அந்தக் கடவுள்கிட்டதான் மன்றாடினேன். ஆனா அலைச்சலும் விரக்தியும்தான் மிச்சம். நெட்வொர்க்கிங் ஃபீல்ட்ல வாய்ப்பு இருந்துது. ஆனா, எனக்கு அந்தத் துறை பழக்கமில்லை. மத்த ஃபீல்ட் எதுக்கு போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னுட்டாங்க. மேன்பவர் ஏஜென்ஸின்னு போனேன்… ஆனா காசு பிடுங்கறதுலதான் குறியா இருக்காங்க… ஒரு கட்டத்தில் கடவுளுக்கு கண்ணே இல்லைன்னு விரக்தி அடைஞ்சேன்… கடவுளே இல்லைன்னுகூட மனசு வெறுத்துப்போச்சு… ஆனா அதே கடவுள் அன்னிக்கு உங்க கண்ல என்னைப் பட வெச்சார் சார்..! இப்ப கடவுள் அருளை நான் உணர்றேன் சார்… ரொம்ப தேங்க்ஸ்!

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

– காலையில் வந்த தொலைபேசி அழைப்பில் இந்தச் சகோதரன் என்னிடம் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது… நானும் அந்த இறைவனின் விளையாட்டை பரிபூர்ணமாக உணர்ந்தேன்.

யார் இந்தச் சகோதரன்?

சில நாட்களுக்கு முன்னர் இதே பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டேன்… ஓர் அனுபவத்தை! நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்!

காலை நேரத்தில் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் வந்துகொண்டிருந்தபோது, பக்கத்து இருக்கையில் பயணித்த ஓர் இளைஞர், விடாமல் போன் செய்து வேலைவாய்ப்பு கேட்டு நட்பு வட்டம், மேன் பவர் ஏஜென்ஸி என்று பேசிக் கொண்டே இருந்தார். அவரது உள்ளத் தவிப்பை, ஏக்கத்திலும் சோகத்திலும் நனைந்த அவரின் முகம் எனக்கு உணர்த்திற்று. சுமார் 30 நிமிடங்கள் அந்த இளைஞரை அருகே அமர்ந்திருந்ததில் உள்ளத்தால் அளந்தேன். கிண்டி ரயில் நிலையம் இறங்கும் போது என் செல்போன் எண்ணை அவருக்குக் கொடுத்துவிட்டு, பிறகு பேசுங்கள் என்று சொல்லி விட்டு அலுவலகம் வந்தேன். ஊடகத் துறை என்றால், நமக்குத் தெரிந்த நண்பர்களுக்குச் சொல்லி வாய்ப்புக்காக சிபாரிசு செய்யலாம். எத்தனையோ பேருக்கு அவ்வாறு வழிகாட்டியுள்ளேன். ஆனால், இந்தத் தம்பியோ பி.இ. படித்துவிட்டு ஏதோ துறையில் இருக்கும்போது… நான் எவ்வாறு, யாரிடம் பரிந்துரைப்பது…? மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. வேலை இழப்பு, வேலை வாய்ப்பின்மை, வெறுமனே வீட்டில் அமர்ந்திருந்தால்… ஓர் இளைஞனுக்கு ஏற்படும் அனைத்து வலிகளும் உணர்ந்தவன்தான் நானும்! அந்த வலி வேதனையை சக ஜீவன் படக்கூடாது என்று எண்ணினேன்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

உடனே… பி.இ. படித்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்குள் பணியில் இருக்கும் இளைஞர்கள் குறித்து இந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். யாரேனும் வாய்ப்புகள் இருந்தால் தகவல் தருமாறும் சொல்லியிருந்தேன்.

நான்கு அழைப்புகள் எனக்கு வந்தன. அவற்றில் என் நம்பிக்கைக்குரிய இரண்டை அந்த நபருக்குப் பகிர்ந்தேன். ஒன்று, நண்பர் ஹரி அண்ணா Hari Ramakrishnan Krishnaகொடுத்தது, அடுத்தது என் உறவினரான ஸ்ரீதரன் Sridharan Sundararajan கொடுத்தது. ஸ்ரீதரன் அத்திம்பேர், தனது அலுவலக ஹெச்.ஆர். பிரிவில் உள்ள வாய்ப்பினைச் சொன்னார். அதற்கு ஏற்ற தகுதி அவருக்கு இருந்தால், நிச்சயம் அங்கே வாய்ப்பு உண்டு என்று சொல்லி, அவரை வந்து பார்க்கச் சொன்னார்.

நேர்முகத் தேர்வு முடிந்து… சில நாட்கள் கடந்து… இதோ இன்று அந்தச் சகோதரன் பாலசந்தர்… பணியில் சேர்ந்துவிட்டான்.

இடம் திருப்தியா இருக்கா? – கேட்டேன்.

நல்லாருக்கு சார். பிடிச்சிருக்கு! என்றான்.

மனம் இன்று மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது!

யோசித்துப் பார்க்கிறேன். காரணம் நானோ அல்லது என் குரலுக்கு செவிமடுத்த என் அத்திம்பேர் ஸ்ரீதரனோ இல்லை..! எல்லாம் பகவத் க்ருபைதான்! அந்த நேரத்தில், அத்தனை பேர் பயணிக்கும் ரயிலில், அவன் அருகில் என்னை அமரவைத்தவன் இறைவன். அவன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க வைத்தவனும் அவனே! தந்தையார் இல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் விதியின் விளையாட்டில், மனம் நொந்த நிலையில் இருந்த அந்த ஜீவனுக்கு… எனைக் கருவியாக வைத்து நம்பிக்கை கொடுத்தவனும் அந்த இறைவனே. ஆறுதலாக நான்கு வார்த்தைகள்! அவ்வளவே!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இப்போது சொன்னேன்… “தம்பி நீ திறமை உள்ளவன்தான். உனக்கான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தித் தருகிறான். சரியாக அதை பயன்படுத்திக் கொள். உன் பிரார்த்தனையின் வலிமை, உனக்கு என்றும் ஊக்கத்தையும் நல்ல நிலையையும் கொடுக்கும். கவலைப் படாதே!”

Related articles

Recent articles

spot_img