கவியரசரின் பிறந்த நாளில்…

அடடே... அப்படியா? கவிதைகள் லைஃப் ஸ்டைல்
Kannadasan
Kannadasan

“கவியரசர் கண்ணதாசன்“
– மீ.விசுவநாதன் –


அன்று தொட்டு இன்றும்
அனைவர் நெஞ்சி(ன்) உள்ளும்
நின்று நிலைத்து வாழும்
நிறைந்த கவிஞர் யாரு?

நன்று சொல்லு என்றால்
நானும் உண்மை யாக
ஒன்று ரைப்பேன் கேளீர்
உலகம் போற்றும் “கண்ண

தாச” னவரின் பேராம்!
தங்கு தடைகள் இன்றி
வாச மிகுந்த பாடல்
வாரி அளித்த வள்ளல்!

ஓசை குறையாச் சந்தம்
உடனுக் குடனே சொல்லி
ஓசை யின்றிச் செல்லும் 
உயர்ந்த கவிஞ(ர்) அன்றோ!

எரித்து விடும்போல் பார்வை
என்று மில்லாக் கண்கள்
சிரிக்கச் சிரிக்கப் பேசும்
பெரிய மனசுப் பிள்ளை!

நரிக்குக் கிடைத்த சோறாய்
நச்சு நண்ப ராலே
உரித்து உண்ணப் பட்ட
உத்த மரிவர் என்பேன்!

பார திக்குப் பின்னே
படித்தும் கேட்டும் இன்றும்
ஊரே மெச்சு கின்ற
உள்ளங் கவர்ந்த கள்வன்

பார தத்தின் மீது
பக்தி கொண்ட தூய 
காரின் பண்பு கொண்டோன்
கண்ண தாசன் என்பேன்.

(இன்று 24.06.2020 கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.