உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக திருமலை திருப்பதி உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் பல கோடிகளைத் தாண்டும். சில விநாடிகள் மட்டுமே கிடைக்கும் ஏழுமலையானின் தரிசனத்திற்காக பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை தரிசனத்திற்கும் ஒவ்வொரு ரேட் என்ற முறையில் செயல்படுத்தப்படுகிறது.
சாதாரண மக்களுக்கென இலவச தரிசனம், நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ரேட்டில் ஒரு தரிசனம், பெரிய தலைக்கட்டுகளுக்கு விஐபி தரிசனம் என பல வகையான தரிசனங்கள் உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கட்டுக்குள் வந்திருப்பதால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. நினைத்ததை விட அதிவேகமாகவே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
விஷயம் இப்படியிருக்கையில் ஹெலிகாப்டரில் விஐபி தரிசனம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதாவது பக்தர் ஒருவர் 1 லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய் கொடுத்தால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்வோம்.
திருப்பதியில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் ஏழுமலையான் விஐபி தரிசனம் காட்டப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாகவே ஊருக்குச் செல்லலாம் என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருப்பதி தேவஸ்தானம் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.
விஐபி தரிசனத்தை நேரடியாக விஐபிகளுக்கும் அவர்கள் சிபாரிசு கடிதம் இருந்தால் மட்டுமே அளிப்போம். இதுவே இங்கே நடைமுறை. இதுபோன்ற தனியார்களுக்கோ சுற்றுலா நிறுவனங்களுக்கோ விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படாது எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆகவே கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை நம்பாமல் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுமாறு பத்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.